×

20 சதவீத போனஸ் கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர் பிரசாரம்

குமாரபாளையம், அக்.18: குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, இந்த  ஆண்டு தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள்  சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு 8.25 சதவீதம் போனஸ் வழங்குவதாக பேச்சுவார்த்தை நடந்தது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை  நடக்கும் போதே, இருதரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.  இதையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள், தங்களிடம் வேலை பார்க்கும்  தொழிலாளர்களுக்கு, விருப்பப்படி போனஸ் கொடுத்தனர். இந்த ஆண்டு  விசைத்தறி தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்கள் முன்னதாகவே போனஸ் வழங்க வேண்டுமென  வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் தொடர் பிரசார போராட்டத்தில்  இறங்கியுள்ளனர். இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர்  அசோகன் கூறுகையில், ‘குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்டு கோரிக்கை அனுப்பியுள்ளோம்.
ஆனால், இதுவரை தொழிற்சங்கத்தின்  கோரிக்கைகள் ஏதும் ஏற்கப்படவில்லை. நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையத்தில்  மட்டும் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டை போல, இந்த  ஆண்டும் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க, முன்கூட்டியே பேச்சுவார்த்தை  நடத்தி 15 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தெருமுனை பிரசாரத்தை அடுத்து 23ம்தேதி  தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்,’ என்றார்.

Tags : continuation campaign ,Loom Workers Union ,
× RELATED தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு