×

போதை மாத்திரை கேட்டு மருந்து கடையில் ரகளை: பட்டாக் கத்தியுடன் வாலிபர் சிக்கினார்

பெரும்புதூர், அக்.17: பெரும்புதூர் அருகே படப்பையில் மருந்து கடையில், பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி போதை மாத்திரை கேட்டு ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
 இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பெரும்புதூர் அருகே படப்பையை சேர்ந்தவர் சரவணன் (26). படப்பை பஜாரில் மருந்து கடை நடத்தி வருகிறார். இங்கு 5 பேர் வேலை செய்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில், சரவணனின் மருந்து கடைக்கு 2 வாலிபர்கள் பட்டாக் கத்தியுடன் சென்றனர்.அங்கிருந்த ஊழியர்களிடம், கத்தியை காட்டி மிரட்டிய அவர்கள், போதை மாத்திரை கேட்டு தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த மணிமங்கலம் போலீசார் ஓடி வந்தனர். பொதுமக்களை கண்டதும் வாலிபர்கள் தப்பியோடினர்.

ஆனால், பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று, ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பிவிட்டார். பின்னர், பிடிபட்டவருக்கு தர்மஅடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாலிபரை காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்த அமானுல்லா (26). கஞ்சா போதைக்கு அடிமையான இவரும், அவரது கூட்டாளிகளும் கடந்த ஒரு வாரமாக மெடிக்கல் ஷாப் உரிமையாளர் சரவணனிடம் போதை மாத்திரை கேட்டு மிரட்டி வந்துள்ளனர். அவர், மாத்திரை கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த வாலிபர்கள் பட்டாக் கத்தியுடன் நேற்று கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். தப்பியோடிய அவரது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : drug shop ,drugstore ,
× RELATED தேனாம்பேட்டை மருந்து கடை ஊழியர் வங்கி...