×

பட்டாபிராம், திருவள்ளூரில் பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 52 சவரன், பணம் கொள்ளை

ஆவடி, அக்.17: ஆவடி அருகே பட்டாபிராம், திருவள்ளூர் பகுதிகளில் பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 52 சவரன் நகைகளையும், ரூ.1லட்சம் பணத்தையும் கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் மாடர்ன் சிட்டி, 4வது தெருவைச் சேர்ந்தவர் இம்மானுவேல்( 47). இவரது மனைவி சாந்தி (40). திருநின்றவூர் தாசர்புரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு எஸ்தர் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் எஸ்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து பெற்றோர் எஸ்தரை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து இரவு 10மணி அளவில் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 42சவரன் நகைகளும், ரூ.1.08 லட்சம் ரொக்கமும் கொள்ளை போய் இருந்து தெரியவந்தது. இது குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் இம்மானுவேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை எடுத்துச் சென்றனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு வரலட்சுமி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(44). வில்லிவாக்கத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோர் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் உத்திரமேரூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக் கிடந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த கம்மல், மோதிரம், செயின் என மொத்தம் 10 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வழக்கம்போல தடயங்களை சேகரித்தனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் திருவள்ளூர் சப் டிவிஷ்னுக்கு உட்பட்ட பகுதிகளில் 528 சவரன் நகைகள் கொள்ளைபோன நிலையில், நேற்று முன்தினம் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் கொள்ளை போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Battapram ,Tiruvallur ,houses ,shutdown ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்