×

மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் உலா

மஞ்சூர்,அக்.12: மஞ்சூர்- கோவை சாலையில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூர் கோவை சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் நீர்மின் நிலையம் உள்ளது. இங்கு மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்புடன் பலதரப்பு மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியை சுற்றிலும் பாக்கு, வாழை மற்றும் மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கெத்தையில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன் கெத்தை, முள்ளி, மானார், அத்திகடவு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே நின்று அவ்வழியாக சென்று வரும் அரசு பஸ்கள், வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.

காட்டு யானைகளின் நடமாட்டத்தால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.   இதுகுறித்து குந்தா ரேஞ்சர் சரவணன் கூறியதாவது, சாலைகளில் காட்டு யானைகளை கண்டவுடன் வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். பயணிகள் கீழே இறங்கி யானைகளை கண்டு கூச்சலிடுவது மற்றும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்ய கூடாது, மேலும் வாகனங்கள் மூலம் யானைகளை பின் தொடர்தல், அவற்றை விரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. காட்டு யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags : road ,Manchur-Coimbatore ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி