×

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் பாதுகாப்பு இல்லாத அங்கன்வாடி மையம்

கடையம், அக்.11:கடையம் அருகே ரவணசமுத்திரம் ஹனபியூர் ஜூம்மா  பள்ளிவாசல் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 20 வருடங்கள் ஆகின்றன. இங்கு அப்பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி  ராமநதியின் கரையில் உள்ளது.  கடந்த தென்மேற்கு பருவமழையின் போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தடுப்புச்சுவர் இல்லாததால்  தண்ணீர் கட்டிடத்தின் அடிப்பகுதி அரிக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரிக்க அங்கன்வாடி கட்டிடத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்தை சுற்றி புதர்களாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆற்றிலிருந்து வெளியேறும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் மையத்தை சுற்றியுள்ள புதரில் குடியேறி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.  இந்த அங்கன்வாடி மையம் திருமலையப்பபுரம்கோவிந்தபேரி சாலையையொட்டி இருப்பதால் வாகனங்களால் குழந்தைகளுக்கு ஆபத்தாக உள்ளது. தற்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அங்கன்வாடி முன்பகுதியில் வேலி அமைத்துள்ளனர். குழந்தைகள் விளையாடும் போது எதிர்பாராத விதமாக வேலி கம்பியில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றி,  கட்டிடம் அரிக்காமல் இருக்க  தடுப்புச்சுவர், சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.
இதுபற்றி ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி தலைவர் புகாரிமீரா சாகிப் மற்றும் சமூக ஆர்வலர் அண்ணாவி சலீம்  கூறுகையில், இந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாமல் இருப்பது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த ஒரு பலனுமில்லை. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப அஞ்சுகின்றனர். இந்த வேலிகம்பியே குழந்தைகளுக்கு ஆபத்தாக உள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுசுவர் அமைத்தால்தான் இதற்கு நிரந்தர தீர்வாகும் என்றனர்.

Tags : Anganwadi Center ,Kaitham ,Ravana Samat ,
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது