×

இரண்டு மாதங்களுக்கு பிறகு கடைமடை வந்த கீழ்பவானி நீர்

காங்கயம், அக்.7:  பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இரண்டு மாதம் கழித்து கடைமடை பகுதிக்கு வந்துள்ளது. இதனால், உரிய நேரத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.  திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவில் உள்ள திட்டுபாறை, நத்தக்காடையூர், முத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 18 ஆயிரம் ஏக்கர், பவானிசாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகிறது. அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு மாதம் கழித்து தற்போதுதான் கடைமடை பகுதியான மங்களப்பட்டிக்கு வந்துள்ளது.  வாய்க்காலின் மேல் பகுதியில் உள்ள விவசாயிகள் அதிக தண்ணீரை தங்களது நிலங்களுக்கு திருப்பி கொண்டதால் கடைமடை பகுதிக்கு பெயரளவுக்கே தண்ணீர் வந்தது. இதனால், உரிய நேரத்தில் நெல் நாற்று கூட நட முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மங்களப்பட்டி கடைமடை விவசாயிகள் கூறியதாவது:


பவானிசாகர் அணையில் இருந்து 120 நாட்கள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 60 நாட்கள் கடந்து தற்போதுதான் கடைமடைக்கு வந்துள்ளது. இனிதான் உழவு பணிகள் தொடங்கப்படும். பருவம் தவறி நடவு செய்யும்போது விளைச்சல் பாதிக்கும்.
இதனால், விவசாய பணி மேற்கொள்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கு காரணமாக கடைமடை பகுதிக்கு வரும் தண்ணீர் தொடர்ந்து திருடப்பட்டதால் மூன்று வருடங்கள் கழித்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட நீரை கொண்டு எவ்வித விவசாய பணிகளையும் செய்ய முடியாமல் உள்ளது. தொடர்ந்து சரியான அளவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

Tags : Kelavani ,
× RELATED மழை நீரை சேகரிப்பதற்காக நாட்டு...