×

நவராத்திரி விழா இன்று துவக்கம் ரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் கோலாகலம்

திருச்சி, அக். 10: உலகில் மூன்று அசுரர்கள் மக்களை கொன்று குவித்து நாட்டை துவம்சம் செய்து வந்தனர். இந்த அசுரர்களை பார்வதிதேவி காளியாகவும், மகாலட்சுமி விஷ்ணுதுர்க்கையாகவும், மகாசரஸ்வதி நிசம்பசூதனியாகவும் உருவெடுத்து 9 நாட்களில் 3 அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றினர். இந்த நாட்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவராத் திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடு மற்றும் கோயில்களில் கொலு வைக்கப்படும். நவராத்திரி விழா இன்று துவங்குகிறது. வீடுகளில் கொலு வைப்பதற்காக சுவாமிகள் உள்பட பல்வேறு வகைப் பொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது. வீடுகளில் கொலு வைப்ப தற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன.
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா இன்று துவங்குகிறது. ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நவராத்திரி கொலுமண்டபத்தை வந்தடைகிறார்.

அங்கு நவராத்திரி கொலு 7.45 மணிக்கு துவங்கி 8.45 மணி வரை நடைபெறுகிறது. அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானத்தை அடைகிறார். 7ம் நாளான அக்டோபர் 16ம் தேதி ஸ்ரீரங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெறுகிறது. அக்டோபர் 18ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் நாளை துவங்கும் நவராத்திரி விழா 19ம் தேதி வரை நடைபெறும். தினந்தோறும் ஆன்மிக சொற் பொழிவுகள், கச்சேரிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இன்று முதல் வரும் 13 வரை மாலை 5.30க்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 6.30க்கு கொலு ஆரம்பித்து இரவு 7.30க்கு முடிவடையும்.

இரவு 7.30 முதல் 8 வரை வெள்ளிசம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி பொது ஜன சேவையுடன் நடைபெறும். இரவு 8.15க்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 8.30க்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். வரும் 18ம் தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 4.30க்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5க்கு நவராத்திரி மண்டபம் சேருகிறார். மாலை 6.30 முதல் இரவு 7.30 வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 8 முதல் 8.30 வரை வெள்ளிசம்பா அமுது செய்தல், தீர்த்தக்கோஷ்டி, பொதுஜன சேவையுடன் நடைபெறும். இரவு 8.45க்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

Tags : Navarathri Festival ,Tiruvanayakkavu ,
× RELATED நவராத்திரி விழா பெரியபாளையத்தம்மன் அலங்காரத்தில் வழிபாடு