×

பாபநாசம் மலையடிவாரத்தில் தொழிலாளியை கடித்து குதறிய கரடி

வி.கே.புரம், அக். 10:  பாபநாசம் மலையடிவாரத்தில் தொழிலாளியை கரடி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நெல்லை மாவட்டம் வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட தெற்கு அகஸ்தியர்புரம் மெயின் ரோட்டைச் சேர்ந்த சின்னமணி மகன் சொரிமுத்து (44). கூலி தொழிலாளியான இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.


நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் சொரிமுத்து மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஆடுகளை மேய்த்து விட்டு அவைகளை வீட்டு கொட்டகையில் அடைக்க ஓட்டி வந்து கொண்டிருந்தார். வீட்டருகே வந்த போது ஒரு கரடி, 2 குட்டிகளுடன் அந்தப்பகுதியில் சென்றது.
இதைப்பார்த்த சொரிமுத்து, கரடிகளை விரட்டும் நோக்கில் 2 கைகளையும் அசைத்து சத்தம் போட்டார். தனது குட்டிகளைத்தான் அவர் தாக்க வருகிறார் என்று கருதிய கரடி சொரிமுத்து மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் அவரது கை, காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக வி.கே.புரம் சுற்று வட்டாரத்தில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வி.கே.புரம் அருகேயுள்ள முதலியார்பட்டியில் குடியிருப்புக்குள் புகுந்த கரடி  வாலிபரை தாக்க முயற்சி செய்தது. தற்போது சொரிமுத்துவை கரடி கடித்து குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  எனவே வனத்துறையினர் வி.கே.புரம் பகுதியில் கூண்டுகளை வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காப்பாற்றிய நாய் சொரிமுத்துவை கரடி கடித்துக் குதறிய போது அவர் வளர்த்த நாய் கடுமையாக குரைத்தது. நாய்க்கு பயந்து கரடி சொரிமுத்துவை விட்டு விட்டு ஓடியது. இல்லாவிட்டால் கரடி இன்னும் கடுமையாக தாக்கி சொரிமுத்துவின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Papanasam ,laborer ,hilltop ,
× RELATED பாபநாசம் அருகே ஊர் பொதுக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்