×

பழைய நினைப்பில் இருக்க வேண்டாம் பேராண்டிகளா என்று ஊழியரை எச்சரித்த அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘முதல்ல ‘மணி’… அப்புறம் ‘பணி’ என்ற பாணியை கடைபிடித்த இலைக்கட்சிக்காரர் பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் வந்தா.. வாசி தொகுதியில, தெள்ளாறு ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல கடந்த ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி ஆடு, மாடு கொட்டகை அமைக்குறதுக்கு அரசு மானியம் கொடுக்குதுன்னு சொல்லியிருக்காங்க. அதன்படி, பணம் இருக்குற மக்கள், முன்பணம் போட்டு கொட்டகைய தாங்களே அமைச்சிக்கிட்டாங்களாம். பணம் இல்லாதவங்களுக்கு அந்தந்த ஊராட்சி செயலருங்க மூலமா, கொட்டகை அமைச்சு கொடுத்தாங்களாம். அதுமட்டுமில்லாம, கால்வாய் தடுப்பணைகள் கட்டுறதுக்கும் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடந்துச்சாம். இப்படி தெள்ளாறு ஒன்றியத்துல மட்டும் ₹4 கோடி வரைக்கும் ஒர்க் நடந்திருக்குறதா சொல்றாங்க. இந்த எல்லா ஒர்க்குக்கும், கமிஷன் தொகைய மட்டும், அப்போ, ஆளும் கட்சியா இருந்த இலைகட்சியைச் சேர்ந்த பச்சையான ஒன்றிய நிர்வாகி கறாராக கேட்டு வாங்கிக்கிட்டாராம்.கால்வாய் ஒர்க்கும், கொட்டகை ஒர்க்கும் முடிஞ்சு ஒரு வருஷத்துக்கு மேல ஆகுதாம், ஆனா, பணம் வரலையாம். இதனால, ஆடு, மாடு கொட்டகை அமைச்ச ஜனங்களும், கால்வாயில தடுப்பணை கட்டிய கான்ட்ராக்டர்களும் ஒன்றிய ஆபிசுக்கும், கமிஷன் வாங்கிய ஒன்றிய நிர்வாகிக்கிட்டயும் நடையா, நடக்குறாங்களாம். பணம் கைக்கு வந்து சேந்தபாடில்லையாம். ஒர்க்கு நடக்குறதுக்கு முன்னாடியே கமிஷன் மட்டும் வாங்கிக்கிட்டாங்களேன்னு ஜனங்களும், கான்ட்ராக்ட்காரங்களும் புலம்புறாங்களாம். இவங்க புலம்பல மாவட்ட நிர்வாகம் தீர்த்து வைக்கனும்னு ஜனங்க கோரிக்கை வெச்சிருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பழைய நினைப்பில் முறைகேடு செய்த ஊராட்சி செயலாளரை எச்சரித்தாராமே மாவட்ட உயரதிகாரி…’’ என்றார் பீட்டர் மாமா.‘தூங்கா நகரத்தின்’ கலெக்டர் சமீபத்தில் மாவட்டத்தின் ‘மங்களகரமான’ ஊரின் ஒன்றியப்பகுதிகளை ஆய்வு செய்யச் சென்றார். ஒன்றியத்திற்குட்பட்ட உரப்பு அதிகம் உள்ள கிராமத்தில் வருகைப் பதிவேட்டில் இருந்ததை காட்டிலும் பணியாளர்கள் வெகு குறைவாகவே இருந்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலெக்டர் விசாரித்ததில், கடந்த ஆட்சியின் போது இதுபோல பல கிராமங்களில் நூறுநாள் வேலையில் முறைகேடுகள் நடைபெறுவது வழக்கம். ஆட்சிமாறியும் பழைய அதிகாரிகளால் காட்சி மாறாமல் இதே நிலை தொடர்வது தெரியவந்தது. ஆட்கள் பணி செய்வதாக கணக்கு காட்டி பணத்தை எடுத்து ஏமாற்றி வருவதை விசாரணையில் தெரிந்து கொண்ட கலெக்டர், ‘பழைய காலம் மாதிரி தப்பு பண்ணிட்டு தப்பிடலாம்னு நினைக்காதீங்க… கடும் நடவடிக்கை இருக்கும்…’’ எனக் கடுமையாக அதிகாரிகள், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் என அங்கிருந்தவர்களை எச்சரித்தாராம். அத்தோடு பொதுமக்களிடம் ‘‘இது உங்க காசுதான், விழிப்பா இருங்க’’ என்றபடி, இதன்பேரில் சிலருக்கு மெமோவும் மாவட்ட நிர்வாகத்தால் தரப்பட்டதாம். இச்சம்பவம் மாவட்டத்தில் பணியில் உள்ள கடந்தகால ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் சிலருக்கு பெரும் கிலியை உண்டாக்கி இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வெயிலூர்ல ரெய்டு என்ற வார்த்தையை கேட்டதும் அதிகாரி முதல் ஊழியர்கள் வரை ரொம்பவே சந்தோஷமாக மாறிவிடுகிறார்களாமே,அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியா முருக கடவுளின் பெயர் கொண்டவரு பணியாற்றி வர்றார். இவர் மாவட்டத்தில எந்த ஆய்வு பணிகளையும் சரிவர மேற்கொள்வதில்லையாம். குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் பயன்படுத்திய சிரஞ்சுகளில் கிரீம் சாக்லெட் அடைத்து விற்பனை ஜோரா நடக்குது. குழந்தைகளுக்கு ஆபத்த ஏற்படுத்தும் இந்த சிரஞ்ச் கிரீம் சாக்லெட்டில் எந்தவிதமான லேபிளும் இல்லாமல் விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு முன்பே இது விற்பனைக்கு வந்தது அதிகாரிக்கு தெரியுமாம். ஆனாலும் எந்த ஆய்வும் நடத்தாம அப்படியே கண்டும் காணாமலும் இருந்து வந்துள்ளார்.இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியதும் மாநகராட்சி அதிகாரிகள் களத்தில் இறங்கி ஆய்வு செய்தாங்க. உடனே பதறி அடித்துக் கொண்டு நாங்களும் ஆய்வு செய்கிறோம்னு பில்டப் செஞ்சாங்க. ஆனாலும் அவங்க எதையும் பறிமுதல் செய்யல. மாநகராட்சி அதிகாரிங்க பறிமுதல் செஞ்ச சிரஞ்சு சாக்லெட்களையே சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்போறோம்னு கேட்டு வாங்கிகிட்டாங்க. ஆனாலும் இப்போ பறிமுதல் செஞ்சிருக்கிறது கொஞ்சமாக தான் இருக்கு, இதமட்டும் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்க முடியாதுன்னு உணவு பாதுகாப்பு அதிகாரி அடம்பிடிக்கிறாராம்.அதோட இது மத்தியபிரதேச மாநிலத்தில இருந்து தயார் செஞ்சு சென்னைக்கு அனுப்பி வைக்கிறாங்க. அங்கிருந்து தான் மற்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புறாங்க. இந்த சிரஞ்சை பரிசோதனைக்கு அனுப்பினா கண்டிப்பா முடிவு பாதகமாக தான் வரும். அதன்பிறகு மீண்டும் ஆய்வு செய்ய சொல்லுவாங்க. நமக்கும் பிரச்னை வரும். எதுக்கு நமக்கு வம்புன்னு அமைதி காத்து வர்றாராம். ஆனா மாதந்தோறும் தனக்கு வர வேண்டிய வைட்டமின் ‘‘ப’’ மட்டும் தனக்கு கீழ் உள்ள அதிகாரிங்க மூலம் வசூல் செய்து தன்னோட பணியை கச்சிதமா செய்து வர்றாராம். அவரு கூட வர்ற ஊழியர்களும்  ஜாலியாக இருக்காங்களாம். இந்த ஆபீசரு ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மாவட்டத்தில பணியாற்றி இடமாறுதலில் சென்றுவிட்டு, மீண்டும் கல்லா கட்ட இதே மாவட்டத்திற்கு வந்துள்ளார் என்பது தான் மாவட்டத்தின் ஹாட் டாபிக்…’’ என்றார் விக்கியானந்தா….

The post பழைய நினைப்பில் இருக்க வேண்டாம் பேராண்டிகளா என்று ஊழியரை எச்சரித்த அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Mani ,Pani ,Uncle ,Peter ,Krivalam district ,
× RELATED பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்