×

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சென்னையின் பிரபல ரவுடி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் சேலத்தில் கைது

* 10 கொலை உள்பட 32க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர், புல்லட் புரூப் கார் வாங்கி சுற்றி வந்த முதல் ரவுடியும் இவர்தான்

சென்னை: தென் சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் நேற்று அதிகாலை சேலத்தில் கைது செய்தனர். கடந்த வாரம் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியான இவர் மீது, 10 கொலை உட்பட 32க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து சென்னையில் ரவுடிகள் மற்றும் கூலிப்படை கும்பலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருண், ‘ரவுடிகளுக்கு அவர்களின் மொழியிலேயே சொல்லிக் கொடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து சென்னையில் வாலாட்டி வந்த ரவுடிகளுக்கு அச்சம் ஏற்பட்டு அண்டை மாநிலங்களுக்கு தப்பி ஓடினர்.

அதேநேரம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்ட கூலிப்படை தலைவன் குன்றத்தூர் திருவேங்கடம், என்கவுன்டரால் அதிரடியாக கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னையில் பல ஆண்டுகளாக சிம்ம சொப்பனமாக இருந்து வந்து சம்பவ செந்தில், சீசிங் ராஜ், காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி (எ) மணிகண்டன் உள்ளிட்ட ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டும் வந்தனர். இந்நிலையில் பல ரவுடிகள் என்கவுன்டருக்கு பயந்து சென்னையை விட்டு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதாக கூறப்பட்டது.

இருந்தாலும், தலைமறைவாக உள்ள ஏ பிளஸ் ரவுடிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண், தனது மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவை தொடங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த பிரிவானது ரவுடிகளை மட்டுமே கண்காணித்து நடவடிக்கை எடுக்கும், மற்ற பணிகளில் இவர்கள் ஈடுபட மாட்டார்கள். இந்த பிரிவுக்கு என தனியாக எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உள்ள மோட்டர் வாகன வளாகத்தில் தனி அலுவலகம் இயங்கி வருகிறது.

இதற்கிடையே ஏ பிளஸ், ஏ, பி கேட்டகிரி ரவுடிகளின் பட்டியலை வைத்து ரவுடிகள் ஒழிப்பு பிரிவு ஒவ்வொரு ரவுடிகளாக கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் ஆந்திர மாநிலத்தில் இருந்து அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் சென்னை வந்த வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலர்கள் குடியிருப்பு அருகே போலீசார் சற்றி வளைத்த போது, போலீசாரை நோக்கி ரவுடி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் சரவணன் தற்பாதுகாப்புக்காக சுட்டத்தில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கடந்த வாரம் என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியும், கூலிப்படை தலைவனாக இயங்கி வந்த தென் சென்னை பிரபல ரவுடி சிடி மணியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் கடந்த 2 மாதங்களாக தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். தென் சென்னையை சிடி மணி இதுவரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

சாதாரணமாக தேனாம்பேட்டை பகுதியில் நடைபாதையில் திரைப்படம் மற்றும் சினிமா பாடல்களை சிடியை விற்பனை செய்துவந்த அவர், குறுகிய காலத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு தென்சென்னை ரவுடியாக உருமாறினார். பிறகு ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்து வந்தார். பிற்காலத்தில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் சிடி மணி நுழைந்தார். இதனால் ரவுடி சம்பவ செந்திலுக்கும், சிடி மணிக்கும் இடையே நேரடியாக யார் பெரியவன் என்பதில் போட்டி ஏற்பட்டது.

இந்த போட்டியால் சிடி மணியை ரவுடி சம்பவ செந்தில் கொலை செய்ய பல்வேறு வகையில் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. இருந்தாலும், தனது கூட்டாளி காக்கா தோப்பு பாலாஜியுடன் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராகிவிட்டு சிடி மணி காரில் வந்த போது, அமெரிக்கா துணை தூதரகம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டதில், சிடி மணி மற்றும் அவரது கூட்டாளி காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் உயிர் தப்பினர்.

அதன் பிறகுதான் தனது உயிருக்கு எந்த நேரத்திலும் எதிர் தரப்பினரால் ஆபத்து ஏற்படலாம் என்று கருதி, மும்பையில் உள்ள தனது கூட்டாளிகள் உதவியுடன் டெல்லியில் விற்பனைக்கு வந்த ‘புல்லட் புரூப்’ ‘’பிஎம்டபுள்யூ’’ கார் ஒன்றை பல கோடிக்கு விலைக்கு வாங்கி, அதை பெரிய அளவில் சொகுசு வசதிகளை ெசய்து சென்னையை வலம் வந்தார். வார இறுதி நாட்களில் தனது கூட்டாளிகளுடன் கிழக்கு கடற்கரை சாலைகளில் இளம் பெண்களுடன் ஆட்டம் பாட்டம், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற திட்டங்களை தீட்டி சிடி மணி இயங்கி வந்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் மேம்பாலம் அருகே போலீசார் சிடி மணியை பிடிக்க முயன்ற போது, அவன் போலீசாரிடம் இருந்து தப்பிக்க போரூர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து கை மற்றும் கால்களை உடைத்து கொண்டு சிகிச்சை பெற்றார். அந்த சம்பவத்தை தொடர்ந்து சிடி மணி குற்ற சம்பவங்களில் நேரடியாக ஈடுபடாமல் தனது ஆட்களை வைத்து கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில்தான் தனிப்படை போலீசார் சேலத்தில் பதுங்கியிருந்த சிடி மணியை கைது செய்தனர். சிடி மணி கைது ெசய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது தந்தை பார்த்தசாரதி ‘தனது மகன் சிடி மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வீடியோ ஒன்றின் மூலம் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தென் சென்னை பிரபல ரவுடி சிடி மணி மீது 10 கொலை, 7 கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தால் என 32க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* சாதாரணமாக தேனாம்பேட்டை பகுதியில் நடைபாதையில் திரைப்படம் மற்றும் சினிமா பாடல்களை சி.டி.யை விற்பனை செய்துவந்த அவர், குறுகிய காலத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு தென்சென்னை ரவுடியாக உருமாறினார்

* போலீசுக்கு பயந்து வீட்டை வாடகைக்கு எடுத்த ரவுடி
சிடி மணியின் நெருங்கிய கூட்டாளி காக்காதோப்பு பாலாஜி கடந்த வாரம் என்கவுன்டர் செய்யப்பட்ட பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ரவுடி சிடி மணி தனது ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு, ‘தைரியமாக இருங்கள்…நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரவுடிகள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்தது. உடனே சிடி மணி எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்து அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதே நேரம் சென்னை போலீசாருக்கு பயந்து, நிலுவையில் உள்ள கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு நீதிமன்றத்திலும் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து உதவி கமிஷனர் ஒருவர் தலைமையிலான தனிப்படையினர் சேலம் சென்று நேற்று அதிகாலை ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியான சிடி மணியை அவரது வீட்டில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவனை தனிப்படையினர் சென்னைக்கு சாலை மார்க்கமாக அழைத்து வருகின்றனர்.

The post என்கவுன்டர் செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சென்னையின் பிரபல ரவுடி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் சேலத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Kakathoppu Balaji ,Salem ,Chennai ,CD' Mani ,CD Mani ,South Chennai ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி