×

குழந்தைகளின் மூளையை வலுவாக்கும் 6 செயல்பாடுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...’ என்றோர் பாட்டு உண்டு. எல்லா குழந்தைகளுமே அவரவர்க்கான பிரத்யேகத் திறன் கொண்டவர்கள்தான். அவர்களின் தனித்துவத்தைக் கண்டடைந்து அதனைத் தூண்டிவிட்டால் நிச்சயம் அவர்கள் துறையில் சாதிப்பார்கள். அதற்கு அவர்களின் மூளைத் திறன் மிகச் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின்   மூளையைத்  தூண்டிவிட்டு  கவனத்தை  கூர்மையாக்கி, அறிவாற்றலை அதிகரிக்கும் ஆறு வழிமுறைகள்  குறித்து  நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்  யோகா  மற்றும்  நேச்சுரோபதி மருத்துவர்  என்.ராதிகா.

1. தூக்கம்

 குழந்தைகளுக்குத்  தூக்கம் மிகமிக   முக்கியம். வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சியைச் சீராக்க  தூக்கம் அவசியம். மேலும் தூக்கம் நன்றாக  இருந்தால்தான் அவர்களால்  மறுநாள்   சுறுசுறுப்பாக  செயல்பட முடியும்.  பள்ளி  பாடத்தையும்  கவனிக்க முடியும்.  தூக்கமின்மை  கவனக்  குறைவையும், சோம்பேறித்தனத்தையும் உண்டாக்கி, ஒருவித வெறுப்பு உணர்வையும், எரிச்சலையும்  உண்டாக்கும். அதனால், குழந்தைகளின்  தூக்கம்  குறையாமல்  பார்த்துக் கொள்ள
வேண்டும்.

2. உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு

குழந்தைகளுக்கு விளையாட்டுதான் மிகச் சிறந்த உடற்பயிற்சி. எனவே, தினசரி சிறிது நேரம் விளையாட அனுமதிக்க வேண்டும். விளையாட்டும்  உடற்பயிற்சியும்  உடலை ஆரோக்கியமாக  வைத்திருப்பதோடு,  மூளையின் செல்களைத்  தூண்டிவிட்டு  சுறுசுறுப்பாக செயல்படவைக்கும்.  யோகாவுடன்  மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள்  சேர்த்து செய்யும்போது  கவனச் சிதறல்கள்  இல்லாமல் இருக்கலாம். மேலும், யோகா  மன ஆரோக்கியம்  மற்றும்  உடல் ஆரோக்கியம் இரண்டையும்  காக்கும். யோகா  பயிற்சியில்  கையை மேலே தூக்குவது, கீழே  இறக்குவது போன்ற  பயிற்சிகளைச்  செய்யும்போது,  அவர்களது  கவனச் சிதறல்கள் சரியாகிறது. அவர்களின் படைப்பூக்கத்தன்மை மேம்படுகிறது. மூளைத் திறன் அதிகரிக்கிறது.

3. சூப்பர்  ப்ரைன் யோகா (Super Brain Yoga)

தோப்புக்கரணத்தை  ‘சூப்பர் ப்ரைன் யோகா‘  என்கிறார்கள். தோப்புக்கரணம் போடும்போது,  இரண்டு  கைகளையும் குறுக்குவாட்டில் வைத்தபடி, இரண்டு  காதுகளையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து, எழும்போது  உடலில் உள்ள எல்லா  தசைகளும் வேலை செய்கின்றன.  

அதுபோலவே, கம்மல் போடுகிற இடத்தில்தான்  மூளைக்குப் போகிற  அக்குபிரஷர் புள்ளி இருக்கிறது. நாம் காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது மூளைக்குப் போகிற செல்கள் செயலூக்கம் பெறுகின்றன. இதனால்,  மூளைக்குப்போகும்  ரத்த ஓட்டம் சீராகிறது.  மேலும், கவனச்சிதறல்கள் குறைந்து மனக்குவிப்புத் திறன் அதிகரிக்கிறது. நினைவாற்றலும் அதிகரிக்கும்.
 
4. நினைவகச் செயல்பாடுகள்  

நினைவாற்றலைத் தூண்டிவிடும் செயல்பாடுகள் நிறையவே இருக்கின்றன.  உதாரணமாக,  செஸ், கேரம், ஜூடுகோ, பசில்ஸ், மெமரிக்கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகள்,  கணக்குகளைப் போட்டு பார்ப்பது, தியானம் செய்வது என நினைவாற்றலைத் தூண்டக்கூடிய  பயிற்சிகள்  நிறைய  இருக்கின்றன.   இதில் குழந்தைகளுக்கு  எது பிடித்திருக்கிறது என்பதைக்  கண்டுபிடித்து அதில்  அவர்களை  ஈடுபடுத்தலாம்.  இப்படிச் செய்வதாலும்  குழந்தைகளின்  நினைவாற்றல் கூடும். மனக்குவிப்பு அதிகரிக்கும்.  முக்கியமாக  அவர்களது தன்னம்பிக்கை  அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.  

5. எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்ட்டிவிட்டிஸ் (Extracurricular Activities)

தற்போது, மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதற்கான எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸும்  நிறையவே  இருக்கின்றன. உதாரணமாக, கிட்டார்,  வயலின், டிரம்ஸ் போன்ற  இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொடுப்பது. ஆர்ட் அண்ட் கிராஃப்ட் வகுப்புகளில்  சேர்த்துவிடுவது,  நல்ல  மெல்லிசைகளை  கேட்கச் செய்வது,  நடன வகுப்புகளில் சேர்த்துவிடுவது போன்றவற்றில்   ஈடுபடுத்துவது குழந்தைகளின்  மூளைச் செயல்பாடுகளைத் தூண்டும்.

கராத்தே, குங்ஃபு, பாரம்பரிய சிலம்பாட்டக் கலை, களரி வகுப்புகளில் சேர்த்துவிடுவதும் மூளைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.  தற்போது  பள்ளிகளில்  ஸ்மார்ட்  கிளாஸ்கள்  மூலம்  நிறைய கற்றுக் கொடுக்கிறார்கள். அதுவும் குழந்தைகளின் மூளையைத்  தூண்டிவிடும்  செயல்பாடுகளில் ஒன்றுதான். புதுப் புது மொழிகளை  கற்றுத் தருவதுகூட  ஒரு வகையில்  குழந்தைகளின்  மூளையைத் தூண்டிவிடும் செயலே. இவைகளில்  குழந்தைகளை  ஈடுபடுத்தலாம். இதன் மூலம் அவர்களின் நேரமும் பயனுள்ளதாக   இருக்கும். மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கும்.

6. சமூகத்தோடு பழகுதல் (Socialization)

நண்பர்களோடும், குடும்பத்தோடும் இணக்கமாகவும் சந்தோஷமாகவும் இருக்க குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.  குழந்தைகள்  வீட்டிலும், பள்ளியிலும் யாருடனும் சரியாகப்  பேசிப் பழகாமல்   தனியாக  இருந்தால், அவர்கள்  தன்னம்பிக்கையற்றவர்களாக  வளர்வார்கள். இது அவர்கள் வளர வளர  பல  பிரச்னைகளை  உருவாக்கும்.  எனவே, குழந்தைகளை சமூகத்தோடு ஒத்து வாழப் பழக்க வேண்டும். எல்லோருடனும் அன்பாகக் கலந்து பழகும்போதுதான்  அவர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  அதுதான்  அவர்களுக்கு எந்தவொரு சூழலையும்  சமாளிக்கும்   திறனை வளர்க்கும்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

வெண்டைக்காய்:  வெண்டைக்காயில் வைட்டமின் சி, கால்சியம், நியாசின், துத்தநாகம் ஆகிய சத்துக்கள் சிறப்பாக உள்ளன. இவை மூளை வளர்ச்சியைத் துரிதமாக்கி உடலை வலுவாக்குகிறது.

நட்ஸ்: நட்ஸில் புரதச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து ஆகியவற்றோடு மூளை வளர்ச்சியைத் தூண்டும் நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வால்நட் காண்பதற்கும் மூளையின் வடிவிலேயே இருக்கும் மிகச் சிறந்த மூளையூக்கி.

மீன்: ஒமேகா 3 கொழுப்புச்சத்து நிறைந்த மீன்கள், மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றவை. வாரம் இரு நாட்கள் இவற்றை உணவில் சேர்க்கலாம்.

கீரைகள்: கீரைகளில் மூளை வளர்ச்சியையும் செயல்பாட்டையும் சிறப்பாக்கும் ஏராளமான வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, வல்லாரைக் கீரை நினைவாற்றலை மேம்படுத்தி, மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்.

Tags :
× RELATED உயிருக்கே ஆபத்தாகும் திரவ நைட்ரஜன் உணவுகள்!