×

வதந்திகளை நம்ப வேண்டாம் தயக்கமின்றி தடுப்பூசி போடுங்கள்: மக்களுக்கு மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: ‘தடுப்பூசி பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்பாமல், அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்,’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நேற்று அவர், தடுப்பூசி போடுவது பற்றி பல்வேறு வதந்திகள் பரவுவது குறித்து மத்திய பிரதேச மாநிலத்தின் பெத்துல் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராம மக்களிடம் பேசியதாவது: இதுவரை நாடு முழுவதும் 31 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 21ம் தேதி ஒரே நாளில் 86 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கொரோனா முடிந்து விட்டது என யாராவது கூறினால் நம்ப வேண்டாம். கொரோனா வைரஸ் என்பது ‘மாறுவேடத்தின் மாஸ்டர்’. இது எண்ணற்ற புதிய வடிவங்களில் பரவுகிறது. அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது. மற்றொன்று தடுப்பூசி போடுவது. தடுப்பூசி ஒரு சிறந்த பாதுகாப்பு கேடயம். கொரோனா தடுப்பூசியை நானும், 100 வயதை நெருங்கும் எனது தாயாரும் போட்டுள்ளோம். எனவே, தடுப்பூசி குறித்த வதந்திகளை ஒதுக்குங்கள். தயக்கமின்றி தடுப்பூசி போடுங்கள்.  வரும் ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினத்தை கொண்டாட உள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான அவர்களின் தன்னிகரில்லாத சேவையை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடியின் பேச்சை கேட்ட பெத்துல் மாவட்டத்தின் துலாரியா கிராம மக்கள் உடனடியாக குடும்பத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்துங்கள்மோடி மேலும் பேசுகையில், ‘‘சென்னையில் வசிக்கும் பவானி தேவி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார். அவர் பயிற்சியை தொடர பவானி தேவியின் தாய், நகைகளை அடகு வைத்ததாக நான் அறிந்தேன். இவர்களைப் போன்ற நிறைய திறமைசாலிகள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு இன்று வெற்றியை எட்டிக் கொண்டிருக்கிறார்கள். டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல நமது ஒவ்வொரு வீரர்களும் போராடியே வந்துள்ளனர். இந்த தேசத்திற்காக செல்லும் அவர்களை நாம் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்,’’ என்றார். தமிழ் மொழியின் அபிமானி நான்இந்நிகழ்ச்சியில் மோடி மேலும் பேசுகையில், ‘‘திருக்குறள், திருவள்ளுவர் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் நான் பேசிய தகவல்களை சென்னையை சேர்ந்த குரு பிரசாரத் இ-புத்தகமாக வெளியிட்டுள்ளார். உலகின் தொன்மையான மொழி தமிழ். இதன் மிகப்பெரிய அபிமானி நான். தமிழ் மொழியை எண்ணி மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த மொழி நம்முடையது என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் அடைய வேண்டும். குருபிரசாத்தின் இ புத்தகம் நமோ ஆப்பிலும் சேர்க்கப்படும். தமிழ் மொழி மீதான எனது அன்பும் அக்கறையும் ஒருபோதும் குறையாது,’’ என்றார்….

The post வதந்திகளை நம்ப வேண்டாம் தயக்கமின்றி தடுப்பூசி போடுங்கள்: மக்களுக்கு மோடி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,PM ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?