நிவாரண நிதியில் முறைகேடு கேரள முதல்வருக்கு எதிரான வழக்கில் லோக் ஆயுக்தா மாறுபட்ட தீர்ப்பு: விசாரணை முழு அமர்வுக்கு மாற்றம்

திருவனந்தபுரம்: முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக கூறி பினராய் விஜயனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் லோக் ஆயுக்தாவில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு விதிமுறைகளை மீறி நிதி உதவி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முதல்வர் பினராய் விஜயன் மற்றும் கடந்த அமைச்சரவையில் இருந்த 18 அமைச்சர்கள் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டது. கடந்த வருடம் பிப்ரவரி 5ம் தேதி இந்த வழக்கில் விசாரணை தொடங்கி மார்ச் மாதம் நிறைவடைந்தது.

இதில் நேற்று லோக் ஆயுக்தா தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் சிரியக் ஜோசப்பும், ஹாரூன் அல் ரஷீதும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கினர். ஒரு நீதிபதி தவறான புகார் என்றும், இன்னொரு நீதிபதி புகார் முறையானது என்றும் கூறினர். இது போன்ற புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உண்டா என்பதிலும் 2 நீதிபதிகளுக்கும் இடையே முரண்பட்ட கருத்து ஏற்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் தீர்ப்பு வர மேலும் காலதாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக் ஆயுக்தாவின் இந்த உத்தரவின் மூலம் முதல்வர் பினராய் விஜயனுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Related Stories: