×

ஊட்டி அருகே ஆழ்துளை கிணறு அமைக்க மீண்டும் அனுமதியா?.. வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டமாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பால் (ஜிஎஸ்ஐ) வகைப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், நிலநடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வின் படி இம்மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

பேரிடர் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஜேசிபி, பொக்லைன் போன்ற கனரக வாகனங்களை கொண்டு மலையை குடைவது, பாதை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாறைகள் வெடி வைத்து உடைப்பதற்கும் தடை உள்ளது. இதுதவிர, சரிவான பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முறையற்ற கட்டுமானங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 2017ம் ஆண்டு முதல் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி கோரும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு விரிவாக ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் முறைப்படுத்தி கட்டிட வரைபட அனுமதிக்கான தடையின்மை சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், பேரிடர் அபாயமுள்ள பகுதிகளில் தடை விதிக்கப்பட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு வரை ஆழ்துளை கிணறு அமைக்க எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரிக் லாரிகள் மூலம் கணக்கு வழக்கின்றி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாகவும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவியது. இனி கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதினால் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதால் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பது முற்றிலுமாக தடை செய்து என அப்போதிருந்த கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த தடை உத்தரவு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டது. இந்நிலையில் ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திபேட்டை அருகே கொல்லிமலை கிராமத்திற்கு செல்லும் சாலையை ஒட்டி தனியார் இடத்தில் தடையை மீறி ரிக் லாரி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று அதிகாலை முதலே நடைபெற்று வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஆழ்துளை கிணறு அமைக்க நீலகிரி மாவட்டத்தில் தடை உள்ள நிலையில் வசதி படைத்தோருக்காக தடை உத்தரவு மீறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், நிலச்சரிவு அபாயத்தை தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே பாதைகள் அமைத்து கட்டுமானங்கள் கட்டுவது அதிகரித்துள்ளது. தற்போது தடையை மீறி ஆழ்துளை கிணறு அமைக்க துவங்கியுள்ளன. குறிப்பாக வசதி படைத்தோர் விதிமீறலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

இதனிடையே காந்தி பேட்டை பகுதியில் ரிக் லாரி மூலம் துளை கிணறு அமைக்கப்பட்டு வருவதை அவ்வழியாக சென்றவர்கள் பார்வையிட்டு வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பி நீலகிரி மாவட்டத்தில் போர்வெல் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், போர்வெல் அமைக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி அனுமதி பெற்று பயன் பெறலாம் என ஆடியோ பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு தற்போது மாவட்டம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Tags : Ooty , Permission to set up a bore well near Ooty again?.. Viral audio creates excitement
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்