×

உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!

வாஷிங்டன் : உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார். வாஷிங்டனில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலக வங்கியின் தலைவராக இருந்த அமெரிக்கர் டேவிட் மல்பாஸ் ஜூன் மாதம் 30ம் தேதி பதவியில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கின.இந்த நிலையில் உலக அளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய - அமெரிக்கருமான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் கடந்த மாதம் அறிவித்து இருந்தார்.

அவரை எதிர்த்து வேறு எந்த நாடும் தலைவர் பதவிக்கு யாரையும் நிறுத்தவில்லை. இதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. எனவே அஜய் பங்கா, உலக வங்கித்தலைவராக போட்டியின்றி தேர்வு ஆகிறார். இதைத் தொடர்ந்து அஜய் பங்காவின் தேர்வு, உலக வங்கியின் இயக்குனர் குழுவால் உறுதி செய்யப்படும். உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா 5 ஆண்டு காலத்துக்கு பதவி வகிக்க முடியும்.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை பூர்விகமாகக் கொண்டுள்ள 63 வயதான அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணை தலைவராக பணியாற்றுகிறார். டெல்லி பல்கலைக்கு உட்பட்ட செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பிஏ படித்த பங்கா, அகமதாபாத் ஐஐஎம்மில் எம்பிஏ பட்டமேற்படிப்பை முடித்தார். 1981 முதல் 1994ம் ஆண்டு வரை நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், பெப்சி, சிட்டி குரூப் நிறுவனங்களில் உயர் பதவி வகித்தார். மேலும் பல நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட்ட இவர் கடந்த 2015ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ajay Banga ,World Bank , World Bank, Indian Origin, Ajay Bank
× RELATED இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி பெறும்: உலக வங்கி