×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி துறையை சேர்ந்த பெண் தலைவர்கள், உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

*ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேச்சு

ராணிப்பேட்டை : ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்’’ என்று மாவட்ட கலெக்டர் வளர்மதி பேசினார்.ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பெண் கிராம ஊராட்சி தலைவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்த ஆய்வுக்  கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.  உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவர்கள், உறுப்பினர்கள் அதிகளவில் தேர்வு செய்யப்பட்டு பொறுப்புகளில் வகித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 164 ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் பதவியில் உள்ளனர். இவர்களுக்கான பொறுப்புகள், கடமைகள் என்ன என்பதை தெரிந்து கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களை ஈடுபடுத்தி பணியாற்ற வேண்டும்.பெரும்பாலான இடங்களில் பெண் தலைவர்களின் உறவினர்கள் நிர்வாகத்தில் தலையிட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதுதொடர்பாக இரண்டாவதாக நடைபெறும் இக்கூட்டத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. கிராம ஊராட்சிகளில் பெண் தலைவர்கள்தான் அனைத்து வகையான வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய கணவரோ அல்லது உறவினரோ இருக்க கூடாது. தற்போது கோடை வெயில் காலம் தொடங்கி உள்ளதால் ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளில் ஒன்றான குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.  பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு அனைவரும் முன்வந்து செயலாற்ற வேண்டும்.  ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக  தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்து ஆய்வு செய்ய வேண்டும்.

பெரும்பாலான ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் குப்பை கிடங்குகளை பயன்படுத்தாமல்  தெருவோரங்களில் குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஊராட்சி மன்ற தலைவர்கள் இதனை கவணிக்க வேண்டும்.  பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ஊர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி பணியாற்ற வேண்டும்.

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்த அறிக்கையை சமர்பித்து நிறைவேற்ற வேண்டும்.  பெண்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை ஏற்று நடத்திட வேண்டும் என்று உங்களை தேர்வு செய்துள்ளனர் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.   ஊராட்சியில் பயன்படுத்தப்படும் பொது தேவை  மின்சார கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் பொதுமக்களின் பங்களிப்பு நிலுவை தொகையை உடனடியாக வசூலிக்க வேண்டும். கிராம ஊராட்சியின் வருவாயை அதிகரிக்க வரி வசூல் பணிகளை அதிகரிக்க வேண்டும்.

ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் வாங்கி என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டு வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் அவர்களின் பணிகளை சுதந்திரமாக செயல்படுங்கள்.

சாலை, மின்சாரம், தெருவிளக்கு, சுகாதாரம், அனைத்து மக்களுக்கும் முறையாக கிடைக்கிறதா என்பதை ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிந்து சுதந்திரமாக செயல்படுங்கள்.  
இதுதொடர்பாக விவரங்கள் தெரியவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Ranipet district , Ranipet: 'Women panchayat councilors and ward members in Ranipet district should act independently'
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2வது நாளாக...