விவசாய பயன்பாட்டிற்காக ஆழியார் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி-விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இருந்து விவசாய நில பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் 120 அடி கொண்ட ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததுடன், டிசம்பர் மாதம் வரை அணையின் நீர்மட்டம் 110 அடிக்கும் அதிகமாக இருந்தது. அதன்பின், மழை குறைவாக இருந்தாலும், அணைக்கு வினாடிக்கு 350 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

 இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதுடன், மழையின்றி தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. தற்போது, அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது. இதனால், அணையின் பெரும்பகுதி மணல் மேடுகளாகவும், சேறும் சகதியுமாகவும், பாறைகள் நிறைந்த இடமாகவும் உள்ளது. அடுத்து கோடை மழைக்கு பிறகுதான் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என்ற நிலை உள்ளது.

 அதுபோல், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. இதற்கிடையே, ஆழியார் அணை வற்றிய நிலையில் இருப்பதால், அணையில் தண்ணீர் இல்லாத பகுதியில், தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, விவசாய பாசனத்திற்காக வண்டல் மண் இலவசமாக எடுத்துசெல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் நீர்நிலைகளான அணை மற்றும் ஏரி, குளங்களில் கோடையின்போது, தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் உள்ள வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டில், பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை மற்றும் குளப்பத்துக்குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. நீர்நிலைகளை தூர்வாரி அதிலுள்ள வண்டல் மண்ணை விவசாய நிலத்துக்கு பயன்படுத்துவதால், நீர்நிலைகளில் மழைநீர் சேமிப்பு திறன் பாதுகாக்கப்படுகிறது. நிலச்சீரழிவு குறையும், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும், மண் வளம் மேம்படும். பயிர் உற்பத்தி திறன் மற்றும் பயிரின வளர்ச்சி ஊக்கவிக்கப்படுகிறது.

 எனவே, ஆழியார் அணை மற்றும் குளப்பத்துக்குளத்தில் இலவசமாக வண்டல் மண் எடுக்க, அதற்கான விண்ணப்பத்தை ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் பெற்ற, கிராம நிர்வாக அலுவலரிடம் நில உரிமைச்சான்று பெற்று தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  இதில், வறண்ட நஞ்சை நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டருக்கும் மிகாமல் வண்டல் மண் எடுத்து கொள்ளலாம். விவசாயிகளே வாகனங்களை கொண்டுவந்து, விவசாய நிலத்துக்கு வண்டல் மண் இலவசமாக எடுத்து பயன்பெறலாம்’ என்றனர்.

 விவசாயிகள் கூறுகையில்,‘ஆழியார் அணையில் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். தற்போது, விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண்ணை எடுக்க அனுமதிப்பதன் மூலம், விவசாய நிலத்துக்கு தேவையான இயற்கை உரமான வண்டல் மண் எடுப்பதுடன், அணையில் தண்ணீர் இல்லாத இடத்தை ஆழப்படுத்தி தூர் வார்வதற்கு ஏதுவாக இருக்கும். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றனர்.

Related Stories: