தேசிய சித்தர் தின விழாவையொட்டி மூலிகை செடிகள் கண்காட்சி: கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில், தேசிய சித்தர் தினவிழாவையொட்டி, மூலிகை செடிகள் கண்காட்சி நடந்தது. இதில் கலெக்டர் ராகுல்நாத், எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் பங்கேற்று பார்வையிட்டனர். மாமல்லபுரம் அரசு மருத்துவமனை மற்றும் ஆயுஷ் சித்த மருத்துவப்பிரிவு சார்பில், 6வது தேசிய சித்தர் தின விழா அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் திருத்தலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி, மாமல்லபுரம் ஆயுஷ் மருத்துவர் வானதி நாச்சியார், மருத்துவ அலுவலர் ஜெபசீலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சித்த மருத்துவத்தின் பயன்கள், அவை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக்கூறினர். இதனை தொடர்ந்து, அவர்கள் மூலிகை மற்றும் உலர் மூலிகைப்பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள், மக்களுக்கு கொழுக்கட்டை, கொண்டைக்கடலை, சத்துமாவு உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கி, சத்தான உணவு பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

காஞ்சிபுரம் மண்டல பேருராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த் ராவ், செயல் அலுவலர் கணேஷ், சிற்பக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பகவதி, அரிமா சங்க தலைவர் முகமது சாலிஷ், செயலாளர் புனிதவேல், பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: