×

8.10 சதவீதத்தில் இருந்து பிஎப் வட்டி விகிதம் 8.15% ஆக அதிகரிப்பு: ஒன்றிய அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: 2022-23ம் நிதியாண்டிற்கான இபிஎப் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் (இபிஎப்ஓ) உச்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அறங்காவலர் குழு கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடந்தது.
இதில், 2022-23ம் நிதியாண்டிற்கான பிஎப் வட்டி விகிதத்தை 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பிறகு அரசாணை வெளியிடப்படும்.

இந்த வட்டி உயர்வு மூலம் நாடு முழுவதும் இபிஎப்ஓவில் இணைந்துள்ள 6 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள் என தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 1977-78ல் பிஎப் வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு 40 ஆண்டுகளில் மிகக்குறைந்த வட்டி விகிதமாக கடந்த ஆண்டு 8.10 சதவீதமாக சரிந்தது. இதனால் இம்முறை வட்டி விகிதம் கணிசமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 0.05 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2015-16ல் 8.8 சதவீதம் ஆக இருந்த நிலையில், 2019-20ல் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 8.5 சதவீதமும், 2020-21ல் 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு 8.10 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Tags : Union Govt , Increase in PF interest rate to 8.15% from 8.10%: Recommendation to Union Govt
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...