×

தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் பரிதவித்த 8 இலங்கை தமிழர்கள் மீட்பு: விடுதலை புலிகள் இயக்கத்தில் பணியாற்றியவரும் வருகை

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் இரவு முழுவதும் தவித்த 8 இலங்கை தமிழர்களை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று மீட்டனர். இதில் ஒருவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி படிப்படியாக குறைந்து வரும் சூழலிலும், அந்நாட்டு மக்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக தமிழ்நாடு வருவது தொடர்கிறது. இலங்கை கிளிநொச்சி மாவட்டம், தருமபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (47), இவரது மனைவி உமாதேவி (42) மற்றும் 19 வயது மகள், 11 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த மகேந்திரா (50), இவரது 20 வயது மகள், 15 வயது மகன் மற்றும் உறவினர் பார்வதி (70) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரு படகில் கிளம்பி ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு வந்தனர்.

அங்கு கடலில் உள்ள மணல் திட்டில் இறக்கிவிட்டு படகோட்டிகள் திரும்பிச் சென்றனர். இதனால் இரவு முழுவதும் 8 பேரும் மணல் திட்டில் பரிதவித்தனர். நேற்று காலை அப்பகுதிக்குச் சென்ற மீனவர்களின் தகவலையடுத்து மண்டபத்தில் இருந்து ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர்,  8 பேரையும் மீட்டு அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கிளிநொச்சியை சேர்ந்த சசிகுமார் கூறுகையில், ‘‘இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பணியாளராக வேலை பார்த்தேன். 2009ல் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது எனக்கு முதுகில் குண்டு காயம் ஏற்பட்டது. உயிர் தப்பித்து குடும்பத்துடன் வசித்து வந்தேன். தனியார் வாகனங்கள் ஓட்டி வாழ்க்கை நடத்தினேன். தற்போது இலங்கையில் வேலை கிடைப்பதில்லை. இதனால் தமிழ்நாட்டுக்கு குடும்பத்துடன் வந்துவிட்டோம்’’ என்றார். விசாரணைக்கு பின் 6 பெண்கள் உட்பட 8 பேரும் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Tamils ,Dhanushkodi ,LTTE , Rescue of 8 Sri Lankan Tamils who were trapped in a sandbar near Dhanushkodi: LTTE also visited
× RELATED குலதெய்வ வழிபாட்டுக்கு தடைகேட்டாரா...