×

30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஊட்டி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் மரத்திடம் மனு அளித்து நூதன போராட்டம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பண்ணை மற்றும் பூங்காக்களில் 800க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.

இதுவரை 300 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 500 பேர் தற்காலிக பணியாளர்களாவே உள்ளனர். நிரந்தர பணியாளர்களுக்கு தற்போது வரை சிறப்பு கால முறை ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. காலமுறை ஊதியம் வழங்கப்படாத நிலையில், குறைந்த அளவே அவர்களுக்கு ஊதியம் கிடைக்கிறது. மேலும், தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றிய போதிலும், அவர்களை இதுவரை தோட்டக்கலைத்துறை பணி நிரந்தம் செய்யாமல் உள்ளது.

மேலும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது. தங்களை பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி உயர்வு வழங்க கோரி கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேலும், ஆண்டு தோறும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியின் போது, அதனை துவக்கி வைக்க வரும் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளிக்கின்றனர். ஆனால், எவ்வித பயனும் இல்லை. இந்நிலையில், தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும்.

தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள் கடந்த 23ம் தேதி முதல் தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்தாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அரசு அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனை தொடர்ந்து, நேற்று ஊழியர்கள் அங்குள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவதார் மரத்திடம் மனு அளித்து நூதன போராட்டம் நடத்தினர். 30 ஆண்டுக்கு மேலாக தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பெண்கள் பலர் கண்ணீர் மல்க மரத்திடம் மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பணிகள் பாதிக்க வாய்ப்பு (பாக்ஸ்)

நேற்று வரை நடந்த போராட்டத்தில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், நாற்று பராமரிப்பு, நுழைவுச்சீட்டு வசூல் போன்ற பணிகளில் ஒரு சில ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று முதல் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால், பூங்கா பராமரிப்பு பணிகள் முற்றிலும் பாதிக்க வாய்ப்புள்ளது.


Tags : Ooty Botanical Garden , Ooty: More than 800 people are working in farms and parks under the control of Horticulture Department in Nilgiris district.
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...