×

வேதாரண்யம் கோடியக்கரை சரணாலயம் சாலையை சீரமைக்க வேண்டும்-சுற்றுலா பயணிகள் கோரிக்கை

வேதாரண்யம் : வேதாரண்யம் கோடிக்கரை சரணாலயம் சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பகுதியில் வங்காள விரிகுடாவும், பாக்ஜலசந்தியும் இணையும் பகுதியையொட்டி 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பசுமை மாறாக்காட்டில் புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, பன்றி, குதிரை, மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் சுதந்திரமாக இந்த காட்டில் சுற்றி திரிகின்றன. இந்த காட்டின் தென்புறத்தில் பாக்ஜலசந்தி கடற்கரை பகுதியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் வரலாற்று நினைவுச் சின்னமாக இன்னமும் விளங்குகிறது. இந்த காட்டில் 154 மூலிகை உள்ளிட்ட 271 வகையான தாவர வகைகள் உள்ளன. 52 குளங்களும், 18 நீர் தேக்கத்தொட்டிகளும் உள்ளன.

ராமாயணத்தில் இலங்கையில் போரிட ராமன் சென்றபோது இங்கு நின்று இலங்கையை பார்த்த இடம் 22 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ள ராமர் பாத நினைவிடமாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் கடற்கரையில் பராந்தக சோழரால் அமைக்கப்பட்ட 1111 ஆண்டுகள் பழமையான சோழர்கால கலங்கரை விளக்கமும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1931ம் ஆண்டு அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கமும் தற்போது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிதாய் விளங்கும் 157 அடி உயரத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளது.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் வெளிமான்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அவைகளை மகிழ்ச்சியோடு பார்த்து செல்கின்றனர். வனவிலங்கு சரணாலயத்திற்கு எதிர்புறம் பறவைகள் சரணலாயம் சதுப்பு நிலப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ஈரான், ஈராக், ரஷ்யா, பாகிஸ்தான், சைபீரியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து 274 பறவை இனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன.

அவற்றில் வனவிலங்கிற்கு அழகு சேர்க்கும் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கரண்டி மூக்கு நாரை, சிறவி, கடல் காகம், கடல் ஆலா, உள்ளான், கொக்கு, அருவா மூக்கன், கரண்டி மூக்கு நாரை, உள்ளிட்டவை அடங்கும். கோடியக்கரை பாக்ஜலசந்தி கடலில் அக்டோபர் முதல் மார்ச் வரை டால்பின் மீன்களும் வந்து செல்கின்றன. டால்பின் மீன்கள் துள்ளிக் குதிப்பதை சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

கடலும் கடல் சார்ந்த மருத நிலப்பகுதியான இந்த கோடியக்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம், புராண கால நினைவு சின்னங்கள் உள்ளிட்டவைகளை சுற்றிப்பார்ப்பதற்கு காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் உகந்த நேரம் என்றும் வனவிலங்கை சுற்றிப்பார்க்க சூழல் மேம்பாட்டுக்குழு சார்பாக வாகன வசதியும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு மூன்று ஓய்வு விடுதியும் பறவைகளை பார்ப்பதற்கு பைனாகுலர் மற்றும் வழிகாட்டிகள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.பம்பாய் இயற்கை வரலாற்று சொசைட்டியின் (பிஎன்ஹெஎஸ்) பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து தங்கி பறவைகள் வந்து போவதை கணக்கெடுப்பு செய்து, பறவைகள் காலில் வளையங்கள் கட்டி அவை எங்கு செல்கின்றன என்பதை கண்காணித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் கல்லூரி, பள்ளி மாணவா்கள் அவ்வப்போது இங்கு வந்து வனத்துறையுடன் சோ்ந்து பறவைகள், வன விலங்குகள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.

இங்குள்ள ராமர் பாதம், சோழர் கால கலங்கரை விளக்கம், மோடி மண்டபம் போன்ற புராதான சின்னங்கள் வனத்துறையின் சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோடியக்கரை வனவிலங்குகளை சுற்றி பார்ப்பதற்கு பேட்டரி வண்டிகளும், சாலை வசதியும், உணவகம் தங்கி விடுதி வசதிகள் செய்து கொடுத்தால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kodiakkarai Sanctuary Road , Vedaranyam : Tourists have demanded to repair the road to Vedaranyam Kodikarai Sanctuary. Vedaranyam Taluk
× RELATED காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பரபரப்பு