புராதன நினைவுச்சின்னங்களில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு: ஒருநாள் மட்டுமே அனுமதி

புதுடெல்லி: தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி எழுதுப்பூர்வமான பதில்: ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை அனுமதிப்பது குறித்து ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. இருப்பினும்  இந்திய தொல்பொருள் ஆய்வு மையம்   நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள நிலத்தில் வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க விரும்பவில்லை. இருப்பினும் உரிய விதிவிலக்கு அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

 உயர்ந்த கிளாசிக்கல் அடிப்படையில் இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட தரமான கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கலாம். ஆனால் நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கும் எந்தவொரு விழா நிகழ்வுக்கும் அனுமதி கிடையாது. விற்பனை, கண்காட்சி போன்ற வணிக அல்லது மத நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய எந்தவொரு நிகழ்விற்கும் அனுமதி வழங்கப்படாது. அரசு துறைகள் மற்றும் பொது அமைப்புகளுக்கு மட்டுமே விழாக்களை நடத்த அனுமதி வழங்கப்படும். தனியார், தனிநபர்கள், தனியார் அமைப்புகள் அல்லது பிற வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இதற்கான இறுதி முடிவு தொல்லியல் துறையிடம் வழங்கப்படும்.  

வழங்கப்பட்ட அனுமதி ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அன்று இரவு 11 மணிக்குள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளும் இரவு 10 மணிக்குள் முடிவடைய வேண்டும். அதன்பிறகு இசை அல்லது ஒலிபெருக்கி போன்றவை அனுமதிக்கப்படாது. ஏதேனும் மீறல் இருந்தால் தொல்லியல் துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளிக்கலாம். டெல்லியில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்களில் நிகழ்ச்சி நடத்த ஒரு நாளைக்கு ரூ. 50,000  திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகை செலுத்த வேண்டும். மற்ற இடங்கில் இந்த தொகை ரூ.30,000 ஆகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: