சென்னை: சமூக நலத்திட்டங்களிலேயே இது மாபெரும் முன்னெடுப்பு, உதவி தேவைப்படும் எந்த பெண்களையும் மனிதநேய உணர்வுள்ள எனது தலைமையிலான அரசு கைவிடாது எனவும் முதல்வர் கூறினார். குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக உரிமை தொகை செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மகளிர் உரிமை தொகை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இந்த திட்டம் நூற்றாண்டின் மகத்தான திட்டம். குடும்பத்தலைவிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள், யார் யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்கும் என கேள்வியெழுந்துள்ளது. ஏற்கனவே ஆதிக்க வர்க்கத்தால் பெண்கள் வீட்டில் முடக்கப்பட்டனர். ஆனால் இன்று பள்ளி கல்விகளில் அதிக மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு பணிகளுக்கு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவதெல்லாம் பெருமையாக உள்ளது.
வீட்டிலும் வெளியிலும் பல மணிநேரம் உழைத்து கொண்டிருக்க கூடிய பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக மகளிர் உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால சமுதாயத்தில் இதன் பலன் என்பது அதிகாமாக இருக்கும். இதற்காக ரூ.7ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகைக்கான வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியிடப்படும், தமிழகத்தில் ஒருகோடி குடும்ப தலைவிகளுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படும். மீனவப்பெண்கள், சிறுகுறு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், கட்டுமான தொழில் ஈடுபடும் பெண்கள், நடைபாதை கடை நடத்தும் பெண்கள், சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் அனைத்து பெங்களுக்கும் மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உதவி தேவைப்படும் எந்த பெண்களையும் மனித நேய உணர்வுள்ள எனது தலைமையிலான அரசு கைவிடாது எனமுதல்வர் கூறினார்.