திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். திருப்பூர் செரங்காட்டை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). இவருக்கு கடந்த 19ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தையை காணவில்லை. தகவலறிந்து திருப்பூர் தெற்கு போலீசார் வந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது குழந்தையை ஒரு பெண் கடத்தி சென்றது தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிந்து அந்த பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை திருப்பூர் இடுவாய் வாசுகிநகர் பகுதியில் பெண் ஒருவர் குழந்தையுடன் சந்தேகப்படும்படி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் சென்று , இடுவாய் வாசுகிநகரை சேர்ந்த முத்து சண்முகம்  மனைவி பாண்டியம்மாளை (42) கைது செய்து, குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  12 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட  போலீசாரை மாநகர  கமிஷனர் பிரவீன்குமார் அவினபு பாராட்டினார். கைது செய்யப்பட்ட பாண்டியம்மாள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எங்கள் மகன் ஆதித்யா ராம் (16) 2021ல் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியாகிவிட்டான். குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் ஏதாவது ஒரு குழந்தையை எடுத்து சென்று வளர்க்கலாம் என் ஆசையில் இந்த குழந்தையை கடத்தி சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Related Stories: