×

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: வணிகர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என வணிகர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சென்னை, தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜார் சாலையில் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கடளையின் ‘‘தமிழை தேடி இயக்கம்’’ சார்பில் தனித்தமிழ் சொற்கள் அறிவோம் எனும் தூய தமிழ்ச்சொற்கள் பதிக்கப்பட்ட பதாகையை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். மேலும், பாண்டிபஜார் பகுதியில் இருக்கக்கூடிய கடைகளில் பெயர் பலகைகளை  தமிழில் அமைக்க கோரி துண்டு பிரசுரங்களை வணிகர்களுக்கு அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமக பொருளாளர் திலகபாமா, பாமக ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.  

இதன்பின்னர், நிருபர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:  தமிழை தமிழ்நாட்டிலே தொலைத்துவிட்டு நம்மை அறியாமலேயே தமிழ் எது பிறமொழி எது என தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். வணிகர்கள் தங்களின் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என வணிகர்கள் சங்க தலைவர் விக்கிரம ராஜாவிற்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளேன்.  தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து 1977ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது தமிழ்மொழி அழிவின் விளிம்பு நிலையில் நிற்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்மொழியே இருக்காது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம். இதற்கு ஒருமாத காலம் தேவைப்படாது. ஏனெனில் வணிகர்கள் எல்லோரும் தமிழ் விரும்பிகள். அதேபோல, தனித்தமிழ் பெயர் அமைத்தால் என் கையாலேயே பூச்செண்டு கொடுத்து பாராட்டுவேன். மேலும், பசு கன்று கூட அம்மா என்று அழைக்கிறது. ஆனால் நாம் மம்மி, டாடி, ஷாப்பிங் போகிறேன், ஸ்கூல் போகிறேன் என்று சொல்லி தமிழை அழித்து வருகிறோம். இதுபோல, தமிழை சிலர் தெரிந்தும், தெரியாமலும் அழித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.




Tags : Tamil Nadu ,Ramdas , All shops in Tamil Nadu should have name boards in Tamil: Ramdas appeals to traders
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து: ராமதாஸ் வரவேற்பு