×

36 செயற்கைக்கோள்களுடன் எல்விஎம் 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது: இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

சென்னை: பிரிட்டினின், ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம்., 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜிஎஸ்எல்வி ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான எல்.வி.எம்., 3- எம்.3 ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது. இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சொந்த செயற்கைக்கோள்களை மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோளையும் விண்ணில் செலுத்துகிறது.

இதன்படி பிரிட்டன் நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே கடந்தாண்டு 36 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்தொடர்ச்சியாக மீதமுள்ள 36 செயற்கைக்கோள்கள் எல்விஎம் 3 - எம்3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. அதன்படி இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. 36 செயற்கைகோள்களைத் தாங்கிச் செல்லும் இந்த எல்விஎம்3 - எம்3 ராக்கெட், இஸ்ரோவின் தயாரிப்புகளில் மிக அதிக எடை கொண்டது. முன்னதாக இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது.

திட, திரவ எரிபொருள்களில் இயங்கும் மார்க்-3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும் 643 டன் எடையும் கொண்டது. 3 நிலைகளை கொண்ட எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் அளவிலான எடையைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைக்கோள்கள் பயன்படும். 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன். ஒவ்வொரு செயற்கைகோளும் சுமார் 150 கிலோ எடை கொண்டது. இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் ஏற்கெனவே 5 முறை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று 6வது முறையாகவும் வெற்றிகரமாக 36 செயற்கைக்கோள்களைத் தாங்கி விண்ணில் ஏவப்பட்டது.

அதேநேரம், வணிகமுறையில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது 2வது முறையாகும். இவ்வளவு குறுகிய கால இடைவெளிக்குள் இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதும் இதுவே முதல்முறை. முன்னதாக இந்த திட்டத்திற்கான செயற்கைக்கோள்களை ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம்  தான் விண்ணில் ஏவி வந்தது. ஆனால், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் பொருளாதாரத்  தடைகள் காரணமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நெட்வொர்க்  அக்சஸ் அசோசியட்ஸ் லிமிடெட் நிறுவனம் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்து, இந்த  செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.

ஒன்வெப் திட்டத்திற்காக மொத்தம் 618 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட வேண்டிய நிலையில், 582 செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மூலம் ஏவப்பட்டு விட்டன. இதன் கடைசி தொகுப்பை தான் தற்போது இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 450 கி.மீ. தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்வெப் நிறுவன செயற்கைக்கோள்கள் சுமார் 1200 கிலோ மீட்டர் உயரத்தில் செயல்பட்டு வருகின்றன. பிராட்பேண்ட் இணைய சேவையை தடையில்லாமல் வழங்கி வருகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். 3 - எம்3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, சரியாக நேற்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில்: எல்விஎம்-3 ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புவி சுற்றுவட்டப்பாதையில் சரியாக பயணித்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த குழுவினருக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : PM Modi ,Isra , LVM3-M3 rocket successfully launched with 36 satellites: PM Modi praises ISRO
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...