×

பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை

துரைப்பாக்கம்: வீட்டுவாசலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வக்கீல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அருகே பெருங்குடி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய் கணேஷ்(33). இவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஜெய் கணேஷ் விளையாடியுள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென ஒரு வழக்கறிஞருடன் ஜெய்கணேசுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு தனது வீட்டுக்கு வந்த ஜெய் கணேஷ், நண்பர்களுடன்  பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஜெய் கணேஷை சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஜெய்கணேஷை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜெய்கணேஷ் கூச்சல் போட்டதால் பொதுமக்கள் வந்துள்ளனர். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய வழக்கறிஞர் ஜெய் கணேஷை மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘’ ஏற்கனவே ஜெய்கணேஷ் இறந்துவிட்டார்’’ என்று தெரிவித்தனர். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ‘’சென்னையில் பிரபல ரவுடியான சி.டி. மணியின் நெருங்கிய நண்பரான ஜெய்கணேஷ், அவருக்கு வழக்கு சம்பந்தமாகவும் ஆஜராகிவந்துள்ளர்.

 இதுபோல் சி.டி. மணிக்கு மற்றொரு நபரும் வக்கீலாக இருந்துள்ளார். இவர்கள் இரண்டுபேரும்தான் சி.டி.மணி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கவனித்து வந்துள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கல் உள்பட அனைத்து பணிகளையும் ஜெய்கணேஷ் , மற்றொரு வக்கீல் ஆகியோர் செய்துள்ளனர்.  இதனால் சி.டி.மணியிடம் நல்லபெயர் வாங்குவதற்காக இரண்டுபேரும் போட்டி போட்டு கொண்டு பணி செய்துள்ளனர்.

இந்த நிலையில்தான் அவர்கள் இடையே பிரச்னை வெடித்துள்ளது. சி.டி.மணியிடம் நெருக்கம் காண்பிக்கும் ஜெய்கணேஷை கொலை செய்ய திட்டம் போட்டு நண்பர்களுடன் சேர்ந்து ஜெய்கணேஷை கொலை செய்துள்ளனர்’ என தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது தொடர்பாக பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே வக்கீல் ஜெய்கணேஷை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்றிரவு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு வழக்கறிஞர்கள், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ‘’கொலையாளிகளை விரைவில் கைது செய்கிறோம்’ என்று போலீசார் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. வீட்டுவாசலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rowdy C. TD , Perungudi, lawyer murder, famous rowdy CD Mani, police intensive investigation
× RELATED சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல்...