×

2 ஆண்டு சிறை… எம்பி பதவி பறிப்பு என்னவாகும் ராகுலின் அரசியல் எதிர்காலம்?: 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

புதுடெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை, அதைத் தொடர்ந்து எம்பி பதவி பறிப்பு போன்ற நடவடிக்கையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? அவர் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் ராகுலுக்கு மக்கள் ஆதரவு பெருகி உள்ளது. பாஜவுக்கு எதிராக சக்திவாய்ந்த தலைவராக ராகுல் உருவெடுத்துள்ள நிலையில், அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை, அதைத் தொடர்ந்து எம்பி பதவி பறிப்பு போன்ற நடவடிக்கை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ராகுலின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது. இதுதொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8 (3), ‘எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் அத்தகைய தண்டனை தேதியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார், மேலும் அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்’ என்று கூறுகிறது. எனவே, உடனடியாக ராகுல் தன் மீதான தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீட்டில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும். ராகுலுக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

எனவே அவர், சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலோ அல்லது குஜராத் உயர் நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு அவர் வழக்கு தொடர்ந்தால் உடனடியாக வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறி. உச்ச நீதிமன்றம் மூலமாக குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென உத்தரவு பெற்றால் மட்டுமே, ராகுலால் 8 ஆண்டு உடனடியாக தடையிலிருந்து விடுபட முடியும். இவ்வாறு கூறி உள்ளனர். ஒருவேளை உயர் நீதிமன்றம் ராகுல் மீதான தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கும் பட்சத்தில், ராகுலின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும். ஆனால், அவரை மீண்டும் எம்பியாக்குவதில் மக்களவை செயலகத்தின் அதிகாரம் இறுதியானதாக இருக்கும்.

சமீபத்தில், லட்சத்தீவு எம்பியான தேசியவாத காங்கிரசின் முகமது பைசல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதைத் தொடர்ந்து உடனடியாக அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. அடுத்த ஓரிரு நாளில் கேரள உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்தது. முகமது பைசலுக்கு மீண்டும் எம்பி பதவி வழங்க ஒன்றிய சட்ட அமைச்சகமும் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் மக்களவை சபாநாயகர் கடந்த 2 மாதமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக பைசல் குற்றம்சாட்டி உள்ளார். அவர் கூறுகையில், ‘‘எம்பி பதவியை பறிப்பதில் காட்டிய வேகத்தை, பதவியை திருப்பி தருவதில் காட்டுவதில்லை. சபாநாயகர் இனியும் எந்த முடிவும் எடுக்காத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன்’’ என கூறி உள்ளார்.

எனவே, குஜராத் உயர் நீதிமன்றம் ராகுல் மீதான தண்டனையை நிறுத்தி வைத்தாலும், அவரது தகுதிநீக்கத்தை ரத்து செய்வது குறித்து சபாநாயகர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினால் அதுவும் ராகுலுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.  குஜராத் உயர் நீதிமன்றத்தில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். எனவே, இந்த விவகாரம் 2024 மக்களவை தேர்தலில் ராகுல் போட்டியிடுவதை சிக்கலாக்கி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* ராகுல் பதவி பறிப்பு: அமித்ஷா விளக்கம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், ‘காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பதவி பறிப்புக்கு பாஜ காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதில் எந்த உண்மையும் கிடையாது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் அவர் கோலார் மாவட்டத்தில் பேசிய பேச்சால் பாதிக்கப்பட்ட ஒருவர் நியாயம் கேட்டு நீதிமன்றத்தின் கதவு தட்டினார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, அவருக்கு எதிரான ஆதாரங்கள் இருந்ததால், அவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மக்கள் பிரதிநிதியாக இருப்பவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினால், அவரின் பதவி பறிபோகும். இந்த சட்ட நடவடிக்கைக்கும் பாஜவுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது’ என்றார்.

* அவசர சட்டம்  இருந்தால் பதவி  தப்பித்து இருக்கும் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான அவசர சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை அடுத்த 3 மாதங்களுக்கு தகுதிநீக்கம் செய்ய முடியாது. தண்டனை வழங்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்தால், அதுவரை அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள். மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், கறை படிந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சாதகமான அவசரச் சட்டம் அபத்தமானது என்றும், அதை கிழித்து எறிய வேண்டும் என்றும் அப்போது காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி கூறினார். அன்று ராகுல் எதிர்த்த அவசர சட்டம் முழுமையான சட்டமாக நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டிருந்தால், அந்த சட்டம் ராகுலின் பதவியை இன்று காப்பாற்றி இருக்கும்.

* இடைத்தேர்தல் நடத்த  தேர்தல் ஆணையம் தயார் ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்ட உடனேயே, அவரது வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 151ஏன்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அந்த வகையில் வரும் செப்டம்பர் 22க்குள் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எனவே தேர்தல் நடத்தி முடிக்கும் முன்பாக, ராகுல் மேல்முறையீடு செய்து தண்டனைக்கான தடையை பெற வேண்டியதும் அவசியமாகி உள்ளது.




Tags : Rahul ,2024 Lok Sabha elections , 2 years in jail... What will happen to Rahul's political future if he is stripped of MP post?: Difficulty in contesting 2024 Lok Sabha elections
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...