சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்

சென்னை: சென்னை, காவேரி மருத்துவமனையில் “மரபுவழி இதயநோய்கள் மேலாண்மையில் சமீபத்திய மேம்பாடுகள்” என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.  ‘இளவயதில் திடீரென ஏற்படும் மாரடைப்பினால் உண்டாகும் இறப்பு நிகழ்வை  தடுப்பது’ என்பது, இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களுள்  ஒன்று. காவேரி மருத்துவமனையின் இதய உயர் சிகிச்சை மருத்துவர்  டாக்டர் அனந்தராமன், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், மரபுவழி இதயநோய்கள் மற்றும் விளையாட்டுகள் தொடர்பான இதயவியல் துறையின்  பேராசிரியர் டாக்டர் சஞ்சய் சர்மா, இதய செயலிழப்பு மற்றும் இரத்த  ஊட்டக்குறை துறை பேராசிரியர் ஆர்தர் வைல்டு, போன்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து இதயவியல் மற்றும் இதய மின் உடலியங்கியல் (எலெக்ட்ரோபிசியோலஜி) துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் இந்த ஒருநாள் கருத்தரங்கில் பங்கேற்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இதய அறுவைசிகிச்சைகள், இதயம் மற்றும்  நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை துறையில் முன்னோடியாக திகழும் டாக்டர்.  செரியன் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக இதயவியல் துறையில் மருத்துவ  மாணவர்களுக்கு கற்பித்து, இதயவியல் மருத்துவராகவும் செயலாற்றி வரும்   டாக்டர். சிவகடாக்‌ஷம் ஆகிய இருவரும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.

இது குறித்து சர்வதேச  இதய மரபணுவியல் மீதான கருத்தரங்கு நிகழ்வின் அமைப்புக்குழு தலைவருமான  டாக்டர் அனந்தராமன் அளித்த பேட்டி:  இதயநோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  40 வயது முதல் 69 வயது வரை நிகழும் இறப்புகளுள் 45% இதய இரத்தநாள நோய்களால் ஏற்படுகின்றன.  இந்திய மக்களிடம் மிகவும் தனித்துவமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மரபியல் அமைப்பு இருப்பதால், இதயநோய் ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது.  அத்துடன் உடற்பருமன் நோய், நீரிழிவு மற்றும் வேறுபல நோய் பாதிப்புகள் இந்த தனித்துவமான  மரபணு அமைப்பினால், இந்தியாவில் அதிகளவில் ஏற்படக்கூடும். மிகுவளர் இதயத்தசையிடர், அகலிப்பு இதயத்தசையிடர்  மற்றும் அரித்மோஜெனிக் வலது இதயகீழறை இதய தசைநோய் மற்றும் சேனலோபதிஸ் ஆகியவை மிக அதிகமாக காணப்படுகின்றவை அனைத்தும் மரபுவழி இதயநோய்கள். காவேரி மருத்துவமனையில் செயல்படும் “மரபுவழி இதய நோய்களுக்கான உயர் தர சிகிச்சை மையம்” இத்தகைய சிறப்பான மருத்துவர்கள் குழுவையும், திறன்மிக்க மருத்துவ சாதனங்களையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: