×

நீண்டநாள் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்களின் கட்டிட முகப்பில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்படும்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: நீண்ட நாட்களாக சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்களின் கட்டிடங்களின் முகப்புகளில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியில் இந்த நிதியாண்டில் சொத்துவரி வசூல் இலக்காக ரூ.1,500 கோடி நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில்,  மார்ச் 22ம் தேதி வரை ரூ.1,408.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள சொத்துவரியை வசூலிக்க வருவாய் துறையால் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சொத்துவரி நிலுவையிலுள்ள சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல், குரல் ஒலி அழைப்புகள், வாட்ஸ்அப் தகவல்  ஆகியவை மூலம் சொத்துவரி செலுத்த கோருதல், சென்னை மாநகராட்சி நிறுவியுள்ள அறிவிப்பு பலகைகளில் சொத்துவரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிடுதல், திரையரங்குகளில் சொத்துவரி தொடர்பாக விழிப்புணர்வு படம் ஒளிபரப்புதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மற்றும் பண்பலை அலைவரிசை ஆகியவை மூலம் சொத்துவரி செலுத்தக் கோரி விழிப்புணர்வு செய்தல், ரூ.50ஆயிரத்துக்கு குறைவான சொத்துவரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் அறிவிப்புகள் சார்வு செய்தல் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் சொத்துவரி செலுத்த விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மொத்தமுள்ள 13.33 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 8.85 லட்சம்  சொத்து உரிமையாளர் தங்களது சொத்துவரி முழுமையாக செலுத்தி சென்னை மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு தங்களது பங்கை அளித்துள்ளனர். மேலும், நிதியாண்டின் இறுதி நாட்களான தற்போது, ஒவ்வொரு நாளும் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை செலுத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி, சொத்துவரி உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை எளிதாக செலுத்த பல்வேறு வழிமுறைகள் ஏற்படுத்தி உள்ளது.  வரி வசூலிப்பாளர்களின் கையடக்க கருவி மூலமாகவும் (காசோலை, வரைவோலை கடன் மற்றும் பற்று அட்டை வாயிலாக) சென்னை மாநகராட்சி இணைய தளம் வாயிலாக பரிமாற்றக் கட்டணம் ஏதுமில்லாமல், சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ், சிட்டி யூனியன், கரூர் வைஸ்யா, எச்டிஎப்சி, ஐடிபிஐ, கனரா, தமிழ்நாடு மெர்கன்டைல், கொடக் மகேந்திரா, லஷ்மி விலாஸ் மற்றும் இன்டஸ் இந்த் ஆகிய வங்கிகள் மூலம் பணமாகவும் செலுத்திடவும், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்கள், ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இ-சேவை  மையங்களின் மூலமாகவும், நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி மூலமாகவும், பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் மூலமாகவும் செலுத்தலாம்.

சொத்துவரி அதிக நிலுவை வைத்துள்ள சொத்துவரி உரிமையாளர் கட்டிடங்களின் முகப்புகளில் “கட்டிடத்தின் உரிமையாளர் சொத்துவரியை நீண்ட நாட்களாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார்” என அறிவிப்பு பதாகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொத்துவரியை அனைத்து உரிமையாளர்களும் கட்டாயம் நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில், சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதன்மையான 100 சொத்து உரிமையாளர்களின் பட்டியல் மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையின் காரணமாக சொத்துவரி செலுத்த தடை பெற்று வசூல் செய்ய இயலாத பட்டியல் ஆகியவை  இணைய தளத்திலும் மற்றும் தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து சொத்து உரிமையாளர்களும் இந்த நிதியாண்டு முடிவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் சொத்துவரியை நிலுவையின்றி செலுத்தி சென்னை மாநகர வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* 70 உயர் ரக குடியிருப்புகளுக்கு அதிகாரிகள் சீல் எழும்பூரில் டிஎல்எப் கமண்டெர் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மொத்தம் 18 தளங்களை கொண்ட அடுக்குமாடியில் 385 வீடுகள் உள்ளன. இதில் 70 வீடுகள் சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்தது தெரியவந்தது. குறிப்பாக நீண்ட நாட்கள் நிலுவையும், இந்த நிதியாண்டுக்கான நிலுவையும் என மொத்தம் ரூ.9,72,143 நிலுவை தொகை உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டும் வரி செலுத்தப்படாததால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த வீடுகளுக்கு சீல் வைத்தனர். மேலும் குடியிருப்பில் பலர் வரி செலுத்தியுள்ளதால் ஒரு பக்க வாசல் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்றொரு வாசல் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

* சென்னை  மாநகராட்சியில் இந்த  நிதியாண்டில் சொத்துவரி வசூல் இலக்காகரூ.1,500 கோடி நிர்ணயம் செய்யப்பட்ட  நிலையில், மார்ச்  22ம் தேதி வரைரூ.1,408.97 கோடி வசூல்  செய்யப்பட்டுள்ளது.
Tags : Chennai Corporation , Notice banners will be placed on the building facades of long-term property tax arrears: Chennai Corporation Information
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...