ஒன்றிய அமைச்சர் தோமர் பங்கேற்பு பயிர் காப்பீட்டு தொகை வழங்க டிஜிகிளைம் திட்டம் தொடக்கம்: இனி உடனுக்குடன் பெறலாம்

புதுடெல்லி: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் உரிமைகோரல்களுக்கான காப்பீடு தொகையை உடனுக்குடன் வழங்க டிஜிகிளைம் திட்டத்தை ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் (பிஎம்எப்பிஒய்), வறட்சி, வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு தொகையை டிஜிட்டல் முறையில் உடனுக்குடன் வழங்குவதற்காக, தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் டிஜிகிளைம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை டெல்லி கிரிஷி பவனில் ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘டிஜிகிளைம் வசதி மூலம் இனி பயிர் காப்பீடு இழப்பீடுகள் மின்னணு முறையில் உடனுக்குடன் வழங்கப்படும். இதன் மூலம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.1260.35 கோடி காப்பீட்டு கோரிக்கைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. பிஎம்எப்பிஒய் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ .1.32 லட்சம் கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திலிருந்து வெளியேறிய தெலங்கானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் பிஎம்எப்பிஒய் திட்டத்தில் மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளன’’ என்றார்.

Related Stories: