சென்னை: ராகுல் காந்தி எம்.பியின் தகுதி நீக்கத்திற்கு மத்தியில் மோடி என்ற பெயரை குறிவைத்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு போட்ட பழைய டிவீட்டுகள் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன. மோடி என்ற பெயரை விமர்சித்ததற்கான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது எம்.பி. பதிவியை பறித்து மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பாஜகவில் இருந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு மோடி என்ற பெயரை விமர்சித்து போட்ட பழைய டிவீட்டுகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரசில் இருந்த குஷ்பு லலித், நீரவ் என அடுத்தடுத்து மோடி என்ற பெயரை கடைசியாக கொண்டவர்கள் ஊழல் வாதிகளாக இருப்பதாக அந்த டிவீட்டர் பதிவில் விமர்சித்திருந்தார். எனவே மோடி என்பதற்கான அர்த்தத்தை ஊழல் என திருத்திக்கொள்ள வேண்டும் என பதிவிட்டிருந்தார். மோடி பெயர் விவகாரத்தில் ஏற்கனவே ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் குஷ்புவின் இந்த பழைய டிவீட் அவரது பதவிக்கு ஆபத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.