×

பாலியல் புகாரில் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வாலை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை.. கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம்!!

பெங்களூரு: பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடா பேரன் பிரஜ்வாலை கைது செய்ய கர்நாடக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதி எம்பியாக இருப்பவர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இந்த முறையும் அதே தொகுதியில் பாஜ கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்தாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா மீது அவரது வீட்டில் வேலை செய்து வந்த உறவுக்கார பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்க மூன்று போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை படை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்குள் நேற்றுமுன்தினம் அதிகாலை பெங்களூருவில் இருந்து ஜெர்மனிக்கு பிரஜ்வல் தப்பி ஓடிவிட்டார். இதனிடையில் இருவர் மீதான பாலியல் புகார் தொடர்பாக தற்போது பென்டிரைவ் ஒன்று சிக்கியுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளது. அதில், கடந்த 2019 முதல் 2022 வரை பல பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான 3,000 க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பிய பிரஜ்வால் வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் மவுனம் காப்பதாக புகார் எழுந்தது. பிரஜ்வால் ரேவண்ணா, பா.ஜ.க. கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி. என்பதால் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பல தரப்பினர் குற்றம் சாட்டினர். கண்டனம் வலுத்ததை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து பிரஜ்வால் விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது. கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், “பிரஜ்வாலை உடனடியாக கைது செய்து, வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,’இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோக்கள் வெளியானதை அடுத்து கட்சி தலைமை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

The post பாலியல் புகாரில் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வாலை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை.. கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம்!! appeared first on Dinakaran.

Tags : National Women's Commission ,Prajwal ,India ,Bangalore ,Karnataka DGP ,Devagawuda ,Hassan ,Karnataka ,Prajwal Revanna ,Janata ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரஜ்வல் மீது 3வது வழக்குப்பதிவு