×

சுட்டெரிக்கும் வெயிலால் கோவில்பட்டி பகுதியில் வறண்ட குளங்கள்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

கோவில்பட்டி: கோடை வெயில் சுட்டெரிப்பதால் கோவில்பட்டி பகுதியில் கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. வருண பகவான் கைகொடுப்பாரா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் வகையில் அனலாய் தகிக்கிறது. சராசரியாக 90 முதல் 98 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக கோவில்பட்டி பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. மதிய வேளைகளில் சாலைகளில் கானல்நீர் தோன்றுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கோவில்பட்டி பகுதியில் பருவமழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால் கோவில்பட்டி, கடம்பூர், கயத்தார், விளாத்திகுளம், கழுகுமலை பகுதிகளில்  நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. மேலும் கண்மாய், குளங்கள், கிணறுகள், போர்வெல் போன்ற நீராதாரங்களும் வறண்டு காணப்படுகின்றன. இந்தாண்டு கடுமையான வெப்பம் மற்றும் பருவமழை பொய்த்து விட்டதால் முடுக்குமீண்டான்பட்டி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் தண்ணீர் வற்றி பாளம் பாளம்மாக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதோடு, கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீராதாரமாக திகழும் பாபநாசம் அணை, கோடை தொடங்கும் முன்பே 26 அடிக்குத் தான் தண்ணீர் உள்ளது. வழக்கமாக மார்ச் மாத இறுதியில் சுமார் 100 அடி வரை அணையில் தண்ணீர் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் கோடை மழை பெய்யாமல் இதே நிலை நீடித்தால் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், கால்நடைகளுக்கும் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலையும் நிலை ஏற்படும். எனவே கோடை காலத்தில் வருணபகவான் கருணை காட்டினால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும். நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்படும்.

Tags : Kowilbati , Dry ponds in Kovilpatti area due to scorching sun: Risk of water scarcity
× RELATED கோவில்பட்டி அருகே 4ம் வகுப்பு பள்ளி...