ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை

சென்னை: ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான பாஜ முன்னாள் நிர்வாகி ஹரிஷ் மற்றும் மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதற்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை என மாநிலம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் மூலம் ‘தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 1 லட்ச ரூபாய்க்கு மாதம் 25 முதல் 35 சதவீதம் வரை வட்டி தரப்படும் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதை நம்பி, தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 1 லட்சம் பேர் சுமார் 2,438 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.இந்நிலையில், திடீரென ஆருத்ரா நிதி நிறுவனத்தை மூடிவிட்டு இயக்குநர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால், முதலீடு செய்திருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் புகார் அளித்தனர். இந்த வழக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆருத்ரா நிதி நிறுவனம் மீது 420, 406, 409, 120(பி), 109, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இயக்குநர்கள், ஏஜென்ட்கள் என 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மோசடி தொடர்பாக நிதி நிறுவன இயக்குநர்களான பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ் மற்றும் மேலாளர்களான பேச்சுமுத்து ராஜா, அய்யப்பன், ஏஜென்ட் ரூசோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளிகளான மேலாண் இயக்குர் ராஜசேகர், அவரது மனைவி உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேர் வெளிநாடு தப்பினர். அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆருத்ரா மீதான வழக்கில் இதுவரை ரூ.5.69 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவன இயக்குநர்கள், ஏஜென்ட்களின் 120க்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 97 அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமறைவான இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஷ் மற்றும் மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைதான ஹரிஷ் பாஜ மாநில விளையாட்டு பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடியை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஹரிஷ், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் முக்கியமானவர் என்பதால் அவரை ரகசிய இடத்தில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ஹரீஷ் முதலீட்டாளர் களிடம் இருந்து ரூ.210 கோடி டெபாசிட் வசூல் செய்து தனது வங்கி கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். இவர் தனது பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சொத்துக்களை வாங்கி  குவித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஹரிஷீன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

* மோசடி குறித்து பேசாமல் இருக்க அரசியல் கட்சியினருக்கு ரூ.100 கோடி வாரி வழங்கிய ஹரிஷ்

பாஜ நிர்வாகி ஹரிஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஆரூத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் புகார் அளிக்க தொடங்கியதும், ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ஹரிஷ் பாதுகாப்பு வேண்டி பாஜவில் இணைந்தார். ஓரிரு நாளில் அவருக்கு பாஜ மாநில விளையாட்டுப்பிரிவு செயலாளராக பதவி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல் நடந்ததால், தேர்தலுக்கான செலவுகளை ஹரிஷ் ஏற்றதாகவும் கூறப்படுகிறது. இது நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ஆதாரங்களில் இருந்து உறுதியாகி உள்ளது.  

மேலும், ஆருத்ரா மோசடி குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பதற்காக, பல அரசியல் கட்சியினருக்கு ரூ.100 கோடி வரை பணத்தை ஹரிஷ் மூலம் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மோசடி நேரத்தில் ஆருத்ராவின் மேலாண் இயக்குநர் ராஜசேகர், அவரது மனைவி உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்யாமல் இருக்க, வெளிநாட்டுக்கு தப்பி செல்ல கட்சி பதவியை பயன்படுத்தி ஏற்பாடு செய்துள்ளார். ஹரிஷ் இவ்வளவு நாள் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் கட்டுப்பாட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி வழக்கில் சிக்கியுள்ள அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபு 28 எஸ்ஐக்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழங்கி உள்ளார். இதனால் ஹரிஷிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்து அனைத்தும் டிஜிபியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் ஹரிஷிடம், எந்தெந்த அரசியல் கட்சியனருக்கு பணம் வழங்கினார், இதுநாள் வரை எந்த தலைவர் கட்டுப்பாட்டில் பதுங்கி இருந்தார், மோசடியில் இருந்து தப்பிக்க எத்தனை கோடி செல்வு செய்தார், நேரடியாக பணம் வாங்கிய அரசியல் கட்சியினர் யார், யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பல மாதங்கள் தலைமறைவாக இருந்த ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ஹரிஷ் கைது செய்யப்பட்டதால் அவரிடம் பணம் வாங்கிய அரசியல் கட்சியினர் தற்போது கலக்கமடைந்துள்ளனர். மேலும், இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 210 கோடி டெபாசிட் வசூல் செய்து, தனது வங்கி கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். இவர் தனது பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் 30க்கும் மேற்பட்ட சொத்துக்கள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: