இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்

நாகர்கோவில்: குமரி ஆபாச பாதிரியார், நாகர்கோவில் சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாமிட்டுள்ளது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால்விளையை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29) மீது, சாட்டிங் மூலம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக  பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் அளித்திருந்தார். இதேபோல் சென்னை சேர்ந்தவர்கள் உட்பட 80 இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, கடந்த 19ம் தேதி கைது  செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை வரும் 4ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வழக்கில் இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கூறி உள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நேற்று முன் தினம் மாலையில், நாகர்கோவில் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் நாகர்கோவில் சிறையில் இருந்து, பாளை சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பாதிரியாரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன் இன்னும் கிடைக்கவில்லை. அந்த செல்போனை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். பாதிரியாருடன் இளம்பெண்கள் இருப்பது போன்ற படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர்களை பிடிக்க ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு தனிப்படையினர் தற்போது கேரளாவில் முகாமிட்டுள்ளனர். விரைவில் இந்த படங்களை பரப்பியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறி உள்ளனர்.

Related Stories: