×

எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்யக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன்திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு 1,076 கி.மீ தொலைவிற்கு இரண்டாவது நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இங்கு மட்டும் 4 கடல் வாழ் பல்லுயிர் காப்பகம் அமைந்துள்ளது. கடற்பரப்பில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடல் வளம் பாதிக்கிறது. கடற்பரப்பில் ஏற்படும் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள், இயற்கை வளங்கள் பாதிக்கின்றன.

கடந்த 2ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் சுற்றுப்பகுதி மாவட்டங்களிலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் குழாய்களில் கசிவு ஏற்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. குறிப்பாக பட்டினம்சேரி மீனவ கிராமம் பெரும்பாலும் பாதித்துள்ளது. எனவே, நிபுணர் குழு அமைத்து இக்கிராமத்தை ஆய்வு செய்து பாதிப்பின் அளவை மதிப்பீடு செய்யுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இடைக்கால நிவாரணமும், சேதமடைந்த சுற்றுச்சூழலை சரி செய்யுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை ேநற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், மனு குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் மீன்வளத்துறை செயலர்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலர், பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.24க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Union government , Case seeking oil spill impact study: Union government ordered to respond
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை