சென்னை மாநகராட்சியில் மின்கம்பிகளை புதைவடமாக அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பேசுகையில், ‘‘புயல் மற்றும் சுனாமி போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கக்கூடிய மாவட்டமாக மயிலாடுதுறை இருக்கிறது. அடிக்கடி இதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் இருக்கின்றன. பொதுவாக, அரசு மாநகராட்சிகளில் இதுபோன்று புதைவடங்கள் வழியாக மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதை நகராட்சிகளுக்கும் செயல்படுத்துகிற ஒரு திட்டத்தை அரசு வகுத்தால் பல்வேறு வகையிலே சிரமங்கள் குறையும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:  முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியினுடைய அனைத்து பகுதிகளிலும் மின்கம்பிகளை புதைவடங்களாக அமைக்கக்கூடிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார். முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் பெரம்பூர் மற்றும் ஆவடி கோட்டங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் மற்றும் அடையாறு கோட்டங்களில் பணிகள் நடந்து வருகிறது. மேலும், கூடுதலாக 7 கோட்டங்களுக்கான திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இந்தப் பணிகள் நிறைவு பெற்றபிறகு, முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: