வெளியே நடமாட முடியாது என்று எடப்பாடி ஆதரவு எம்எல்ஏ ரவிக்கு கொலை மிரட்டல்: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார்

சென்னை வெளியே நடமாட முடியாது என்று போன் செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது அதிமுக அரக்கோணம் எம்எல்ஏவும் எடப்பாடி ஆதரவாளரான ரவி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச பேரவையில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு எடப்பாடி ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அதிமுகவின் இரு பிரிவு எம்எல்ஏக்கள் பேரவையில் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டினர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்களின் பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனால் பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேரவை முடிந்து எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் திருவல்லிக்கேணியில் உள்ள அரசு விடுதியில் தங்கினர். அப்போது எடப்பாடி ஆதரவு எம்எல்ஏவான ரவிக்கு போன் மூலம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ரவி, நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ‘பேரவையில் நேற்று நடந்த பிரச்னை தொடர்பாக எனது செல்போனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் குறிப்பிட்ட 2 நம்பர்களில் இருந்து ஆபாசமாகவும், வெளியே நடமாட முடியாது என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே சட்டமன்ற உறுப்பினரான எனக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பந்தப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

புகாரின்படி திருவல்லிக்கேணி போலீசார் அரக்கோணம் எம்எல்ஏ ரவி செல்போனுக்கு வந்த 2 போன் நம்பர்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். எடப்பாடி ஆதரவு எம்எல்ஏ ஒருவர் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: