அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் இணைய பாதுகாப்பு தேசிய கருத்தரங்கம்

திருப்போரூர்: புதுப்பாக்கம் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் இணைய சட்டம் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த தேசிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. புதுப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் இணைய சட்டம் மற்றும் இணைய பாதுகாப்பின் வளர்ந்து வரும் போக்குகள், தற்போதைய எண்முறை கணினி தொழில்நுட்ப யுகத்தில் உள்ள `சிக்கல்கள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில், சட்டக்கல்வி இயக்கக இயக்குனர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். புதுப்பாக்கம் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி முதல்வர் கெளரிரமேஷ் வரவேற்றார்.

வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில், காலையில் நடைபெற்ற முதல் அமர்வில் சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை உதவிப்பேராசிரியர் லதா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மதியம் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துறை தலைவர் ராஜலட்சுமி, விஐடி சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் கணேசன், புதுச்சேரி அம்பேத்கர் சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் வரதராஜன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

பின்னர், மாலை நடைபெற்ற இறுதி அமர்வில், சைபர் கிரைம் குற்றங்கள், அதை தடுக்கும் வழிமுறைகள் அவற்றில் `காவல் துறையின் பங்கு’ என்ற தலைப்பில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உரையாற்றினார். முடிவில், உதவிப் பேராசிரியர் அசோக்குமார் நன்றி கூறினார். இந்த கருத்தரங்களில், பல்வேறு சட்ட கல்லூரிகளை சேர்ந்த சட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related Stories: