×

கொரோனா தடை நீங்கியும் கொடைரோட்டில் 3 ரயில்கள் மட்டுமே நிறுத்தம் ஆள் அரவமின்றி கிடக்கும் ஆங்கிலேயர் காலத்து ரயில் நிலையம்

*ஆயிரக்கணக்கானோர் வருவாயின்றி தவிப்பு  *ஏற்கனவே நின்ற ரயில்களை நிறுத்த வலியுறுத்தல்

நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் சுற்றுலா பயணிகளுக்காகவே அமைக்கப்பட்ட கொடைரோடு ரயில் நிலையத்தில் கொரோனா தடை நீங்கிய பிறகு 3 ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. இதனால் டாக்சி ஓட்டுனர்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு என அழைக்கப்படும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் சுற்றுலா பயணிகளுக்காகவே ஏற்படுத்தப்பட்ட இந்தியாவில் பாரம்பரிய ‘ஏ’ கிரேட் ரயில் நிலையங்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல், மூணாறு, இடுக்கி, தேக்கடி என திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் எளிதில் வந்து செல்ல வசதியாக இருந்தது இந்த கொடைரோடு ரயில் நிலையம்.

இங்கு கொரோனா காலத்திற்கு முன்பு வரை விரைவு, அதிவிரைவு, சிறப்பு ரயில்கள் என 23 ரயில்கள் நிறுத்தப்பட்டது. கொரோனா தடை காலம் முடிந்து இயல்பு நிலை திரும்பி ஒன்றரை வருடம் ஆகி விட்டது. ஆனால் கொடைரோடு ரயில் நிலையத்தில் தற்போது வரை வெறும் 3 ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இந்த ரயில் நிலையத்தை நம்பியிருந்த டாக்சி ஓட்டுனர்கள், வியாபாரிகள் வருவாயின்றி கடும் அவதியடைந்து வருகின்றனர்.

காபி, ஏலக்காய் சென்றனஇதுகுறித்து சுற்றுலா பயணிகள் வழிகாட்டியும், சமூக ஆர்வலருமான சுந்தர்ராஜன் கூறியதாவது: இந்திய அளவில் குறிப்பிட்ட ‘ஏ’ கிரேடு ரயில் நிலையங்களில் ஒன்று கொடைரோடு ரயில் நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் கேரளா உள்பட தென்பகுதிக்கும், வடமாநிலங்களுக்கும் செல்லும் முக்கிய வழித்தடத்தில் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம் அனைத்து வசதிகள், நான்கு நடைமேடைகளுடன் நீண்டு அகன்று உள்ளது.

இங்கு கொரோனா காலத்திற்கு முன்பு வரை தேஜஸ், குருவாயூர், நெல்லை, முத்துநகர், பொதிகை, ஹவுரா, கொல்லம் மற்றும் சிறப்பு ரயில்கள் என 23 ரயில்கள் வரை நிறுத்தப்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் காபி, ஏலக்காய், பழங்கள், பூக்கள் போன்றவை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மேலும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானல், மூணாறு, இடுக்கி தேக்கடி உள்ளிட்ட இடங்கள் செல்ல இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.

3 ரயில் மட்டுமே நிறுத்தம்

கொரோனா தடை காலத்திற்கு பின் இயல்பு நிலை திரும்பி மற்ற ரயில் நிலையங்களில் முன்பு போல் அனைத்து ரயில்களும் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரயில்நிலையத்தில் மட்டும் முன்பு நின்று சென்ற பல ரயில்கள் நிற்காமல், வெறும் 3 ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இந்த ரயில் நிலையம் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த டாக்சி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வியாபாரிகள் என 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் மறைமுகமாக பயனடைந்து வந்த 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் போதிய வருவாயின்றி கடும் அவதியடைந்து வருவதுடன் பெரும்பாலானோர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வந்த மாணவ- மாணவிகள், விவசாயிகள், அரசு- தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமமடைந்து வருகின்றனர்.

கண்டும், காணாமல் இதுகுறித்து கொடைக்கானல் ரோடு ரயில் பயணிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் சங்கம் சார்பில் தென்னக ரயில்வே மதுரை மண்டல நிர்வாக அதிகாரி, பொது மேலாளர் என பலரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். மேலும் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி ரயில்வே அமைச்சகத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தனர். ஆனால் மதுரை மண்டல ரயில்வே அதிகாரிகள், ஒன்றிய ரயில்வே அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் பாரம்பரியமிக்க ரயில் நிலையத்தை மூடும் நோக்கில் செயல்படுகிறார்கள்.

நாங்கள் புதிதாக எந்த ரயிலையும் நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. ஏற்கனவே நின்று சென்ற ரயில்களை மட்டுமே மீண்டும் நிறுத்த வலியுறுத்திதான் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். தொடர்ந்து இதே போக்கினை கடைப்பிடித்தால் விரைவில் பொதுமக்கள், வணிகர்கள், சுற்றுலா தொழில் புரிவோர், ஏற்றுமதியாளர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம். எனவே ரயில்வே நிர்வாகம் ெகாடைரோடு ரயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Kodairod , Nilakottai: Corona at Kodairod railway station, which was built for tourists during the British era in Dindigul district
× RELATED கொடைரோடு பகுதியில் பகலில் வாட்டியது...