×

திருவாடானை பகுதியில் ஆயிரம் ஆண்டு கல்வெட்டுக்களை பாதுகாக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவாடானை : உலகில் இதுவரை எந்த நாட்டிலும் தங்களது வரலாற்று பண்பாடுகளை பதிவு செய்த தமிழ் இனம் போன்று எந்த இனமும் கிடையாது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பழந்தமிழர்கள் மிக சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்கள். மொழியாலும், இனத்தாலும் தமிழர்கள் மூத்த குடிமக்கள் என்பது வரலாற்று பூர்வமாக நிரூபிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கீழடி கொடுமுடி போன்ற இடங்களில் அகழாய்வு இவைகளை நிரூபித்து வருகின்றன. இதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்கள் அகழாய்வு செய்ய வேண்டிய நிலையில், பழைமை வாய்ந்ததாக உள்ளது. அதற்கான சரித்திர சான்றுகளும் நிரம்பியிருக்கின்றன.

இப்பகுதியில் பழமையான சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள், மகாவீரர் சிலைகள், புத்தர் சிலைகள் என பல வரலாற்று சின்னங்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. சமூகத்தின் மீதும் பழமையான வரலாற்றை வெளிக் கொண்டு வரவேண்டும் என்ற தீவிர எண்ணத்தினால் சில கல்வெட்டு ஆய்வாளர்கள் இப்பகுதியில் முகாமிட்டு பல வரலாற்று தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் அவர்களால் கண்டறியப்பட்ட பல கல்வெட்டுகள் பராமரிப்பின்றி வெட்ட வெளியிலும் வெயில் மழையிலும் சிதைந்து வருகிறது. இவற்றை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.திருவாடானையை சுற்றி பல்வேறு கிராமங்களில் பழமையான கல்வெட்டுகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. திருவாடானை அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் பழைய சிவன் கோயில் கல்வெட்டு ஒன்று 16ம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.கள்ளிக்குடி அருகே சூரம்புளி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த தன் தலையை தானே அறுத்து உயிர்நீத்த வீரனின் சிலை உள்ளது. இதை நவகண்டம் தலைபலி என அழைக்கப்படுகிறது. இந்த சிலை ஒன்று சிவன் கோயில் முன்பு உள்ளது.

இதேபோல் திருவாடானை அருகே உள்ள மாஞ்சூர் கிராமத்தில் இடிந்து கிடந்த சிவன் கோயில் அருகே கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. இவை 13ம் நூற்றாண்டு கல்வெட்டு என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் புல்லுகுடி சிவன் கோயில் உள்பிரகாரத்தில் 20க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இவை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரிய வருகிறது.இதேபோல் அரும்பூர் கிராமத்தில் பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே ஊரில் மகாவீரர் சிலை ஒன்று பராமரிப்பின்றி கிடந்ததை, கடந்த ஆண்டு கிராம பொதுமக்கள் சேர்ந்து கோயில் கட்டி பராமரித்து வருகின்றனர்.

ஆனந்தூர் சிவன் கோயிலில் பழமையான கல்வெட்டுகள் இடிந்து கீழே குவிந்து கிடக்கிறது. திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் அம்மன் சன்னதி பக்கம் தரையில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளது.தொண்டி சிவன் கோவில் நம்புதாளை சிவன் கோவில் ஓரியூர் மகாலிங்க சுவாமி கோயில் போன்ற இன்னும் ஏராளமான பழமை வாய்ந்த வரலாற்று தொடர்புகள் உடைய கிராமங்களும் அங்கு உள்ள கோயில்களில் உள்ள கல்வெட்டுகளும் நிறைந்துள்ளன. இவைகள் அனைத்தும் போதிய பராமரிப்பின்றி சிதைந்து வருகிறது. இவற்றை பாதுகாக்க அரசு சிறப்பு நிதி ஒதுக்கி பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvadan region , Thiruvadanai: There is no race in the world so far that has recorded its historical culture like the Tamil race. In that too
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...