×

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் எலக்ட்ரீசியன் படுகொலை: நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் கொலை செய்யப்பட்டு கிடந்த எலக்ட்ரீசியன் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் நாராயணபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் பிரபாகர் (34), காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பட்டு சேலை விற்பனை கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற பிரபாகர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்களிடம் விசாரித்துள்ளனர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.  

இந்நிலையில் இன்று காலை காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையம் அருகே மேம்பாலத்தின் கீழ் ரத்த காயங்களுடன் வாலிபர் சடலம் கிடப்பதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தபோது, நாராயணபாளையம் தெருவை சேர்ந்த பிரபாகர் என தெரியவந்தது.

ரத்தகாயங்களுடன் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய், புதிய ரயில்நிலையம் அருகே வரை சென்று நின்றது.  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது பிரபாகர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரது நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kanchipuram New Railway Station , Electrician murdered near Kanchipuram New Railway Station: Friends, relatives interrogate
× RELATED ரவுடி கொலை தொடர்பாக பிடிக்க...