கோவை நீதிமன்றம் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்: வழக்கறிஞர்கள் குவிந்ததால் பரபரப்பு

கோவை: கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கவிதா, குழந்தைகள் மற்றும் கணவனை விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். கவிதாவை, சிவக்குமார் தேடி வந்தார். இதனிடையே, கவிதா, கடந்த 2016ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை கோவை ஜே.எம்.1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக கவிதா நேற்று நீதிமன்றம் வந்தார். அப்போது, அவரது கணவர் சிவக்குமாரும் பின்தொடர்ந்து வந்தார். கவிதாவிடம், சிவக்குமார், குடும்ப பிரச்னை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கவிதா முதலாவது தளத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றார். பின்தொடர்ந்து சென்ற சிவக்குமார், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதா மீது ஊற்றினார்.இதில், அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த கவிதா, வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார்.

அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிலர், அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கோர்ட் வளாகத்தில் இருந்த தப்ப முயன்ற சிவாவை, ஆனைமலை காவல் நிலைய பெண் தலைமை காவலர் இந்துமதி விரைவாக செயல்பட்டு சில வழக்கறிஞர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர். பெண் தலைமை காவலரின் வீர தீர செயலை வெகுவாக பாராட்டி எஸ்பி பத்ரிநாராயணன் ரூ.5000 பண வெகுமதி வழங்கினார்.

Related Stories: