வீடு கட்டுமான பணிக்கு வைத்த கம்பிகளை திருடிய 3 பேர் தந்தை, மகனிடம் சிக்கினர்: புழல் சிறையில் அடைப்பு

அம்பத்தூர்: வீடு கட்டுமான பணிக்கு போட்டு வைத்த இரும்பு கம்பிகளை திருடிய 3 பேரை தந்தை, மகன் நள்ளிரவில் மடக்கிப் பிடித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (55). இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் தனது வீட்டை இடித்து அதே இடத்தில் புதிய வீடு கட்டி வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டின் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரவு தூங்கியுள்ளார். பின்னர் அங்கு ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டதும் எழுந்து பார்த்துள்ளார்.

அப்போது அங்கு போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை மூன்று பேர் திருடிச்செல்வது தெரியவந்தது. அவர்களை பிடிக்க சண்முகமும், அவரது மகன் அன்பரசனும் முயன்ற போது அவர்கள் வைத்திருந்த கத்தியால் இருவரின் கையையும் அறுத்துள்ளனர். இருப்பினும் விடாது மூவரையும் மடக்கிப் பிடித்த இருவரும் அருகே உள்ள அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், புளியந்தோப்பு கே.பி. பார்க்கை சேர்ந்த தினேஷ் (22), ஜெகநாதன் (24), வினோத் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: