×

அய்யம்பேட்டை ஊராட்சி தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: அய்யம்பேட்டை ஊராட்சி கீழ்த்தெரு சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டை ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், கோயில்கள், வங்கிகள், மருத்துவமனை, ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால், எப்பொழுதுமே பரபரப்பாகவே காணப்படும் அய்யம்பேட்டை கீழ் தெரு வழியாகத்தான் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், தனியார் தொழிற்சாலை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்காக செல்லும், கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மூகாம்பரி அம்மன் கோயில் எதிரே உள்ள கால்வாய் பகுதியில், காலை நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் கழிவு நீர்கள் அனைத்தும் கால்வாயின் மேல் வழிந்து செல்வதால், கழிவுநீர் அனைத்தும் சாலையில் செல்கின்றன. இதனை மிதித்தவாறு பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும், முதியோர்களும் சென்று வருகின்றனர். மேலும், துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழலும் நிலவுகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்திலேயே மிகப்பெரிய ஊராட்சிகளில் ஒன்றான, இங்கு 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

இங்குள்ள தெருக்கள் முழுவதும் மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளன. இந்த மழைநீர் வடிகால்வாயில் இருந்து வெளியேறும் வீட்டு உபரிநீர் மற்றும் கழிவுநீர்கள் அனைத்தும் கீழ் தெரு பகுதியிலுள்ள மழைநீர் வடிகால் வழியாகத்தான் செல்கின்றன. இதனால், மூகாம்பிகை அம்மன் கோயில் பகுதியில் உள்ள கால்வாய் கடைசி பகுதியாக உள்ளதால், கிராமத்திலிருந்து வெளியேறும் அனைத்து கழிவுநீர்களும், ஒரே இடத்தில் சேருவதால் கால்வாயில் இருந்து வழிந்து தெருக்களில் தஞ்சமடைகிறது.

இதனால், இப்பகுதியில் ஒன்றிய நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, கீழ்த்தெரு கடைசி பகுதியில் தரைப்பாலம் ஒன்று அமைத்தும், கால்வாயை விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சுகாதார சீர்கேட்டால் இப்பகுதி மக்கள் தவித்து வரும் நிலையில், இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராமமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Ayyampet Panchayat Street , Sewage overflowing in Ayyampet Panchayat Street: Urge to take action
× RELATED கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு...