மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே வேகத்தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம்

மானாமதுரை: மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே விபத்தை தடுக்க வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை-பரமக்குடி இடையே நான்கு வழிச்சாலையில் சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, கமுதக்குடி, பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதால் விபத்துகள் நடப்பதில்லை. மானாமதுரை ஆனந்தபுரம் பைபாஸ் ரோட்டில் இருந்து நகரை இணைக்கும் சாலையும், பைபாஸ் ரயில்வே கேட் மேம்பாலமும் சந்திக்கும் இடத்தில் இருவழி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை வழியாக நகரில் இருந்து மதுரை செல்லவும், ராமேஸ்வரம் செல்லவும் முடியும். ஆனால் புது பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் அமைக்கப்படாமல் சர்வீஸ் ரோடு மட்டும் இருப்பதால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. அதே போல புது பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள சங்கமங்கலம் வரை நான்கு வழிச்சாலையின் இருபுறமும் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. தவிர புது பஸ் ஸ்டாண்டு அருகே தனியார் திருமண மண்டபங்கள், ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவுவாயில் உள்ளிட்டவை உள்ளன.

இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். பாதசாரிகள், டூவீலர்களில் செல்வோர் இந்த ரோட்டை கடப்பது வழக்கம். இந்த நான்கு வழிச்சாலையில் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மேலப்பசலை வரை செல்லும் வாகனங்களின் வேகம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இருபுறமும் சர்வீஸ் ரோடு இருந்தும் விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் நடமாட்டமுள்ள இப்பகுதியில் இரண்டு சாலைகளுக்கு நடுவில் (பேரி கார்ட்) வேகத்தடுப்புகள் அமைக்கபட்டிருந்தாலும் அதிகாரிகள் வருகை, முக்கிய அரசியல் பிரமுகர்கள் வருகையின் போது இவை ஓரமாக வைக்கப்படுகின்றன.

அவர்கள் சென்றபின் மீண்டும் அதே இடத்தில் வைப்பது கிடையாது. இதனால் மீண்டும் விபத்து அபாயம் நிகழ வாய்ப்புள்ளதால் வேகத்தடுப்புகள் அமைக்கவேண்டும் என்று என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முருகானந்தம் கூறுகையில், ‘வழிவிடு முருகன் கோயில் பஸ் ஸ்டாப்பில் தினமும் நூற்றுக்கணக்கானோர் இறங்கி ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர், மரக்கடை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சாலையை கடக்கின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் மண்டபங்களுக்கு வருவோர் ரோட்டை கடந்து செல்ல வேண்டிய நிலையில் வாகனம் வருவது தெரியாமல் கடக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதத்திற்குள் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. விபத்தை தடுக்கும் முன் புது பஸ் ஸ்டாண்ட் முதல் வழிவிடுமுருகன் கோயில் வரை நிரந்தரமாக தடுப்புகள் அமைக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: