×

சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.21,19,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில்  குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.  

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 03.03.2023 முதல் 16.03.2023 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.10,77,600/- அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய  நபர்களுக்கு ரூ.8,79,900/- அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 805  நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு  ரூ.1,61,500/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

அதன் விவரம் :

 வ. எண்     மண்டலங்கள்    குப்பைகள் கொட்டிய நபர்களுக்கு விதிக்கப்பட்ட  அபராதத் தொகை  (ரூ.)    கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களுக்கு விதிக்கப்பட்ட  அபராதத் தொகை (ரூ.)    காவல்துறையில் புகார்  அளிக்கப்பட்ட விவரம்    சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கு விதிக்கப்பட்ட  அபராதத் தொகை (ரூ.)    
1.    திருவொற்றியூர்    56,300    54,000    94    8,200    
2.    மணலி    37,000    23,000    26    5,000    
3.    மாதவரம்    70,000    30,000    26    10,000    
4.    தண்டையார்பேட்டை    55,000    40,000    298    12,500    
5.    இராயபுரம்    86,700    50,000    123    10,000    
6.    திரு.வி.க.நகர்    51,100    52,500    29    8,000    
7.    அம்பத்தூர்    79,400    73,900    34    12,000    
8.    அண்ணாநகர்    80,500    90,000    0    8,300    
9.    தேனாம்பேட்டை    1,27,300    80,000    26    13,000    
10.    கோடம்பாக்கம்    66,600    93,500    27    12,000    
11.    வளசரவாக்கம்    71,200    55,000    19    9,000    
12.    ஆலந்தூர்    56,500    55,000    28    11,500    
13.    அடையாறு    83,000    80,000    25    20,000    
14.    பெருங்குடி    70,000    78,000    32    11,000    
15.    சோழிங்கநல்லூர்    87,000    25,000    18    11,000    
மொத்தம்    10,77,600    8,79,900    805    1,61,500    

எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் காலிமனைகளில் அதிகக் குப்பைகள் காணப்பட்டால், பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.


Tags : Chennai , Chennai, Garbage and construction waste, Person pasting posters, Fine, Corporation action
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...