வீட்டில் வெந்நீர் கொட்டி படுகாயம் குன்னூர் ஜி.ஹெச்-ல் சிகிச்சையளிக்க மருத்துவர் இல்லாததால் குழந்தை பலி

*உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

குன்னூர் : வீட்டில் வெந்நீர் கொட்டி குன்னூர்  அரசு மருத்துவமனையில் தீக்காயம் ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க  மருத்துவர் இல்லாததால் பரிதாபமாக குழந்தை இறந்தது. உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது நீலகிரி மாவட்டம் குன்னூர்  எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகனுக்கு வரும்  28ம் தேதி திங்கட்கிழமை திருமணம் நடக்க உள்ளது. இதற்காக மணிமாறனின் வீட்டிற்கு கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த  உறவினர்கள் கார்த்தி, காளியம்மன் தம்பதியின் குழந்தை சரண்யா (3) மற்றும் இவரது பாட்டி சுசீலா ஆகியோர் வந்து தங்கியிருந்தனர்.

மணிமாறன் வீட்டில் ஹீட்டர் மூலம் நேற்று வெந்நீர் தயார் செய்தனர். அப்போது விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண்யாவின் உடல் பட்டதில் வெந்நீர் சரண்யா மீது கொட்டியது. இதில் உடல் வெந்து காயம் ஏற்பட்டதால் சரண்யா அலறி துடித்தாள். இதையடுத்து குழந்தையை மீட்டு உடனடியாக குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு மதியம் அழைத்து வந்து தீவிர சிகிச்சை  பிரிவில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை  அளிக்கவில்லை. சிகிச்சை நேரத்தில் இருக்கக்கூடிய சம்பந்தப்பட்ட மருத்துவர் மருத்துவமனைக்கு  வரவில்லை. அங்கிருந்த செவிலியர் மட்டுமே குழந்தையின் உடலில் களிம்பு மருந்து தடவினார்.

 இதையடுத்து குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தேவை என மருத்துவமனை நிர்வாகத்தின் கேட்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் வெளியில் சென்றுவிட்டதாக கூறினர். மேலும் தனியார் ஆம்புலன்சிலேயாவது செல்ல அனுமதி கொடுங்கள் என உறவினர்கள் கேட்டனர். ஆனால் அதற்கான தேவை இல்லை.

குழந்தைக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கிறோம் என மருத்துவமனை ஊழியர்கள் கூறிவிட்டனர்.  

இந்த நிலையில் குழந்தைக்கு 5  மணியளவில் ஜூஸ் குடிக்க கொடுக்கும்படி செவிலியர்கள்  தெரிவித்தனர். அதனை நம்பி உறவினர்கள் குழந்தைக்கு ஜூஸ் குடிக்க  கொடுத்தனர்‌. திடீரென குழந்தை வாயில் நுரை தள்ளி உயிரிழந்தது‌.  அதன்பின்னர் வேறு பணி நேரத்தில் பணிபுரியும் மருத்துவர் அவசரமாக மருத்துவமனைக்கு வந்து குழந்தைக்கு ஏன் ஜூஸ்  கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த  குழந்தையின் உறவினர்கள் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.  மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குன்னூர் தாசில்தார் சிவகுமார் மற்றும்  ஏடிஎஸ்பி மோகன் நிவாஸ் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர். இதில், தவறு இருந்தால் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட மருத்துவர் சம்பவயிடம் வந்தார். அவரிடமும், மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் விசாரணை நடந்தது.

Related Stories: